தொல்லியல் ஆய்வு
புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன். தொல்லியல் துறை ஆய்வாளரான இவர் கடந்த 1990–ம் ஆண்டு முதல் புதுச்சேரி பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அரியாங்குப்பம் அரிக்கன்மேடு பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் ரோமானிய வணிக தளத்தின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து புதுவையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஆரோவில் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டார். இதற்காக அங்குள்ள ஆரோவில் நுழைவாயில் அருகில் உள்ள செம்மண் பகுதியில் மேற்பரப்பை ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வு கழகத்தில் முறையான அனுமதி பெற்றார்.
முதுமக்கள்தாழி கண்டுபிடிப்பு
பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆய்வு பணியை தொடங்கினார். அவருடன் கோபிநாத் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஆய்விற்கான அவர்கள் அங்குள்ள 5 இடங்களில் சுமார் 4 மீட்டர் ஆழம் குழிகளை தோண்டினர். இதில் 4 குழிகளில் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை பத்திரமாக தோண்டி எடுத்தனர்.
அந்த தாழிகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்புகால மக்களின் தாழிகள் என்பது தெரியவந்தது. மேலும் அந்த தாழிகளில் இரும்புகால மனிதர்களின் ஒரு சில எலும்புகள், அவர்கள் உபயோகப்படுத்திய உலோகத்தினால் ஆன வாள், கத்தி, ஈட்டி, கதிர்அரிவாள், மண் குவளைகள், கல் மணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இந்த தாழிகளில் கிடைத்த பொருட்களை அவர்கள் பத்திரமாக மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு...
இது குறித்து பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
ஆரோவில் பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களை புதைக்க பயன்படுத்திய தாழிகள் கிடைத்தன. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்த உடன் அவர்களது உடலை ஒரு தாழியில் வைத்து மண்ணில் புதைத்து விடுவர். அப்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் உடலுடன் வைத்து புதைப்பது வழக்கம். அவ்வாறு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முதுமக்கள் தாழியில் கிடைத்துள்ள பொருட்களை வைத்து பார்க்கும் போது 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்புகால மனிதர்கள் உலோகத்தினால் ஆன பொருட்களை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதே போல் ஆரோவில் பகுதியில் இருந்து இடையஞ்சாவடி வரை பழங்கால மனிதர்களின் பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம். எனவே அடுத்த கட்டமாக வருகிற அக்டோபர் மாதம் முதல் மீண்டும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அப்போது மேலும் ஏராளமான பொருட்கள் கிடைக்கலாம்.
இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.
SOURCE: DAILY THANDHI

No comments:
Post a Comment