ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அனைத்து கட்சிகளும் அறிக்கை வெளியிட்ட பின், முதல் கட்ட தேர்தல் துவங்கிய பின் வெளியிடப்பட்ட அறிக்கை, "ஒரே பாரதம், உன்னதமான பாரதம்' மற்றும் "அனைவருக்கும் அரவணைப்பு, அனைவருக்கும் முன்னேற்றம்' என்ற, கோஷங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, ஊழல், அரசு சேவைகள் கிடைப்பதில் மக்களுக்கு உள்ள சிரமங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களை அமல்படுத்துவதில் அரசு இயந்திரங்களின் மெத்தன போக்கு, அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவருவது ஆகியவை, உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டு உள்ளன. அதாவது, பா.ஜ., ஆட்சி அமைத்தால் இவற்றை தீர்க்க, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.,வின் ஆட்சி - மக்களை மையமாக வைத்து, கொள்கை முடிவுகளின் அடிப்படையில், தடாலடி நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கும். அதே நேரத்தில், அனைத்து விஷயங்களிலும் அரசு தலையிடாதவாறு, சிறிய அரசு இயந்திரம்; ஆனால், திட்டங்களையும், பணிகளையும் உடனுக்குடன் முடிக்கக்கூடிய ஆட்சி திறன் ஏற்படுத்தப்படும் என, உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், எந்த கட்சியால் ஆட்சி செய்யப்படும் மாநிலமும், தங்கள் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தடையாக உள்ளது என்ற, புகார் வராத அளவிற்கு; பிரதமருக்கு நிகராக, முதல்வர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். "டீம் இந்தியா' என்று, மத்திய அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் இந்திய அணி என, கருதப்பட்டு, ஆட்சி நடத்தப்படும் என, பா.ஜ., தெரிவித்து உள்ளது.
சிறுபான்மையினருக்காக நிறைய சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வழிபாட்டு தல புனரமைப்பு முதல், உருது மொழி பாதுகாப்பு வரை, திட்டங்களை வகுத்து, சிறுபான்மையினருக்கும், பா.ஜ.,விற்கும் படு தூரம் என்ற, தோற்றத்தை உடைக்கும் வகையில், அறிக்கை அமைந்து உள்ளது. இதுதவிர, நாட்டை ஒருங்கிணைப்பது, ஆட்சி கட்டமைப்பு சீர்திருத்தம், ஆட்சியால் பயன் அடைய கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், இந்திய நாட்டையும், சமூகத்தையும் பெரும் வளர்ச்சி பாதையில் உடனடியாக கொண்டு செல்வது என, நான்கு முக்கிய ஆட்சி நோக்கங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளன. இதன் அடிப்படையில் செயல்படுத்தப்படக் கூடிய நூற்றுக்கணக்கான திட்டங்களும், நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் மிகமிக கவர்ச்சியாக உள்ளவை;
1. தேவையில்லாத சட்டங்கள், அரசு அனுமதிகள் மற்றும் அரசு கட்டமைப்புகள் ஒழிக்கப்படும் இந்தியாவில், இந்திய சமுதாயத்திற்கு பொருத்தமில்லாத ஏகப்பட்ட பிரிட்டிஷ் கால சட்டங்கள், சுதந்திரத்திற்கு பிறகு இயற்றப்பட்ட, கம்யூனிஸ்ட் கொள்கையை அடிப்படையாக வைத்துள்ள சட்டங்களும் உள்ளன. இதேபோல் தான் அரசு அனுமதிகள் உள்ளிட்டவை. இவை அனைத்தும் அரசு அதிகாரிகளின் ஆதிக்கத்தையும், அதிகார பலத்தையும் நிலைநாட்ட மட்டும் தான் இயற்றப்பட்டு உள்ளன. இவற்றால் தொழில்களுக்கும், தனிநபர்களுக்கும் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. கோர்ட்களில் வழக்குகளும் அதிகரிக்கின்றன. இவற்றை ஒழிப்பதன் மூலம், பொருளாதாரம் சுலபமாக மேம்படும்.
2 . கீழ் கோர்ட்டுகள் மற்றும் அவற்றின் நீதிபதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு/ நீதிபதிகள் தேர்வுக்கு தேசிய அளவிலான ஆணையம்/ குற்றவியல் விசாரணை முறைகள் சீர்திருத்தம்/ அனைத்து மட்டங்களிலும் விரைவு கோர்ட்டுகள்/ சட்ட மொழியை எளிமைப்படுத்துதல் இதன் மூலம் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதோடு, உடனுக்குடன் நீதி கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களும் சட்டத்தை புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படுத்தப்படும். விரைவாக நீதி கிடைத்தால், குற்ற சம்பவங்கள் மற்றும் ஊழல் குறையும். அதோடு, அரசியல் தலையீடு இல்லாமல் நீதிபதிகளின் நியமனம் நடக்கும்.
3. விவசாயிகளுக்கு 50 சதவீதம் அளவிற்கு லாப விகிதம் இருக்குமாறு ஏற்பாடு/ விளைபொருட்களுக்காக சிறப்பு ரயில் வழித்தடங்கள், விவசாய மேம்பாடு மானியங்களை அள்ளிக் கொடுப்பதற்கு பதில், விவசாயம் லாபகரமான தொழிலாக மாறுவதற்கு வழிவகை செய்ய முயற்சி எடுக்கப்படும் என, தெரிகிறது. விளைபொருட்களுக்காக சிறப்பு ரயில் தடங்கள் அமைப்பது, புதுமையான முயற்சி. இது தவிர, பாசனம் உள்ளிட்ட விவசாய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
4 இந்தியா முழுவதும் 100 புதிய நகரங்கள் அமைத்தல்/ பெரிய நகரங்களுக்கு துணை நகரங்கள் அமைத்தல் இந்தியாவில் பெரும்பாலான நகரங்கள் திட்டமிடப்படாமல் தானாகவே உருவானவை. இதனால் தான், பெரும்பாலான பிரச்னைகள் எழுகின்றன. 100 நகரங்களை புதிதாக உருவாக்கினால், ஒவ்வொரு மாநிலத்திலும் 3 திட்டமிடப்பட்ட நகரங்களாவது புதிதாக அமைக்கப்படும். இவை ஒரு சீரான நகர்ப்புற வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். துணை நகரங்கள் அமைப்பதன் மூலம், பெரிய நகரங்களில் நெரிசல் குறையும்.
5 அதிவேக புல்லட் ரயில் விடப்படும் . சென்னை - மதுரை இரண்டரை மணி நேரம். காலை, முதல் வண்டியை பிடித்தால், முருகன் இட்லி கடையில் டிபன் சாப்பிட போய்விடலாம்! இவை தவிர, பா.ஜ.,விடம் இருந்து வழக்கமாக எதிர்பார்க்கக் கூடிய முற்போக்கு தொழில் துறை திட்டங்கள் இடம் பிடித்து உள்ளன. அவற்றில், மின்சார உற்பத்தியை அதிகரிப்பது, உற்பத்திக்கு உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றுவது உள்ளிட்டவை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளன. அதேபோல், கல்விக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என, கூறப்பட்டு உள்ளது. இது தவிர, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டம், முதியோருக்கான திட்டங்கள் என, இது ஒரு முற்போக்கான தேர்தல் அறிக்கையாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:
ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அனைத்து கட்சிகளும் அறிக்கை வெளியிட்ட பின், முதல் கட்ட தேர்தல் துவங்கிய பின் வெளியிடப்பட்ட அறிக்கை, "ஒரே பாரதம், உன்னதமான பாரதம்' மற்றும் "அனைவருக்கும் அரவணைப்பு, அனைவருக்கும் முன்னேற்றம்' என்ற, கோஷங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, ஊழல், அரசு சேவைகள் கிடைப்பதில் மக்களுக்கு உள்ள சிரமங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களை அமல்படுத்துவதில் அரசு இயந்திரங்களின் மெத்தன போக்கு, அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவருவது ஆகியவை, உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டு உள்ளன. அதாவது, பா.ஜ., ஆட்சி அமைத்தால் இவற்றை தீர்க்க, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து
சரக்கு போக்குவரத்துக்கு தனி சாலைகள்!
மக்கள் சொந்த வாகனங்கள் வைத்துக்கொள்ளும் தேவையை குறைக்கும் வகையில், பொது போக்குவரத்து சேவைகள் மேம்படுத்தப்படும்
சாலை வழி, நீர்வழி, ரயில்வே ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் உருவாக்கப்படும்
பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக நீர்வழித்தடங்கள் மேம்படுத்தப்படும்
சரக்கு போக்குவரத்தை விரைவாக்க, தேசிய சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்கப்படும்
சுற்றுலா பயணிகள் மற்றும் புனித பயணம் மேற்கொள்வோருக்காக சிறப்பு ரயில் திட்டங்கள்
விளை பொருட்களுக்கு பிரத்யேக ரயில் தடங்கள்
துறைமுக ரயில் தடங்களை இணைத்து, புதிய சரக்கு ரயில் கட்டமைப்பை உருவாக்குதல்
விளை பொருட்கள் மற்றும் இதர வேளாண் உற்பத்தி பொருட்களின் போக்குவரத்திற்கு தனி ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். அதில், இவற்றின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு தேவையான சிறப்பு ரயில் பொட்டிகள் வடிவமைக்கப்படும். இதே போல, உப்பு போக்குவரத்திற்கும் சிறப்பு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்
ரயில்வே துறை நவீனமயமாக்கப்படும்
ரயில்வே துறையின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய, பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
ரயில் நிலையங்கள் அதிநவீனமாக மாற்றப்படும்
ஆளில்லா ரயில்வே கடவு பாதைகள் ஒழிக்கப்படும்
ரயில் பெட்டிகள் மற்றும் சிக்னல்கள் ஆகியவற்றை நவீனப்படுத்த புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்
புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்படும்
நீதித்துறை
வழக்கு தேக்கத்தை குறைக்க தேசிய வழக்காடும் கொள்கை :
அனைவருக்கும் நீதி என்பதில், பா.ஜ., உறுதி கொண்டுள்ளது. தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். கோர்ட்டுகளில், வழக்குகள் தேங்குவதை தடுப்பதற்காக, சில நடைமுறைகளை கொண்டு வருகிறோம்
நீதிபதிகள் நியமனம், காலியிடங்களை நிரப்புதல், புதிய கோர்ட்டுகளை திறத்தல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து பைசல் செய்வதற்கு, புதிய முறை கொண்டு வரப்படும்
நீதித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப, விரைவு திட்டம் கொண்டு வரப்படும். கீழமை கோர்ட்டுகளில், கோர்ட்டுகள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, தேசிய நீதித்துறை கமிஷன் ஏற்படுத்தப்படும்.
கோர்ட்டுகள் திறன்பட செயல்படும் வகையில், அவற்றை நவீனப்படுத்துவதற்கு, நிதி ஒதுக்கப்படும்
வர்த்தக சட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தனி கோர்ட்டுகள் உருவாக்கப்படும்
நீதி பரிபாலன முறையை எளிதாக, விரைந்து, திறன்பட ஆக்குவதற்காக, குற்றவியல் நீதி நடைமுறையில் திருத்தம் கொண்டு வரப்படும்.
இந்தியாவில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும், கணினிமயமாக்குதல் மற்றும் இணையம் மூலம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும், விரைவு கோர்ட்டுகள் ஏற்படுத்தப்படும்
லோக் அதாலத் மற்றும் தீர்ப்பாயங்கள் மூலம், மாற்று முறை தீர்வு அமைப்புகள் விரிவுபடுத்தப்படும்
நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, தேசிய வழக்காடும் கொள்கை, கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசு தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மறுஆய்வு செய்யப்பட்டு, குறைக்கப்படும்
காலத்துக்கு உதவாத சட்டங்களை அவ்வப்போது மறுஆய்வு செய்து, அதில் சீர்திருத்தம் அல்லது நீக்கம் செய்யப்படும்.
அறிவுசார் சொத்துரிமை வழக்குகளை விசாரிக்க, தனி கோர்ட்டுகள் ஏற்படுத்தப்படும்
வழக்கறிஞர்களுக்காக, தேசிய அளவில், மின்னணு நூலகம் ஏற்படுத்தப்படும்.
பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்படும்
தடய துறை, ஆர்பிட்ரேஷன், அறிவுசார் சொத்துரிமை, சர்வதேச சட்டம் ஆகிய துறைகளில், நிபுணத்துவம் கொண்ட தனி பல்கலைகழகங்கள், தேசிய அளவில் இணைக்கப்படும்
சமரச மையம் மற்றும் சட்ட நடைமுறைகளை பயன்படுத்துவதற்கான, உலக மையமாக, இந்தியா உருவாக்கப்படும்.
சட்ட நடைமுறைகள் மற்றும் மொழிகள் எளிமையாக்கப்படும்
சட்டம் குறித்த தகவல்கள், எளிதாக கிடைக்க வகை செய்யப்படும்
சாதாரண மக்களுக்கு, தங்களின் உரிமைகள், கடமைகளை தெரிந்து கொள்ள, சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பள்ளி பாடத்திட்டத்தில், சட்ட விழிப்புணர்வு பாடங்கள் இடம் பெறும்
எரிவாயு
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு!
ஒவ்வொரு குடும்பத்துக்கும் அனைத்து வசதிகளும் கொண்ட குறைந்த விலை சொந்த வீடு கிடைக்க புதிய திட்டம்
நடுத்தர மக்களுக்கு கையைகடிக்காத, கடன் சுமையை அதிகம் ஏற்படுத்தாத வகையில் வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்
நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் எரிவாயு மற்றும் குடிநீர்
புதிய குடியிருப்பு வளாகங்களில் விளையாட்டுக் கான வசதிகள் கட்டாயமாக்கப்படும்
ஏற்கனவே உள்ள, பல்வேறு வீட்டுவசதி திட்டங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை போக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்படும்
அனைத்து வளங்களும் இந்த இலக்குக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பயன்படுத்தப்படும்
ஒட்டுமொத்த வீட்டுவசதி துறையை மேம்படுத்தும் வகையில், கடன்வசதி, வட்டி விகிதங்கள் தொடர்பான புதிய கொள்கை வகுக்கப்படும்
சுற்றுச்சூழல்
மாசில்லா எரிபொருள்
நகரங்களில் மாசில்லா எரிபொருளுக்கு முக்கியத்துவம்
நகரங்களில், மாசு அளவை குறைக்க சுத்தமான எரிபொருள் பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்
வன உயிரினங்கள் மற்றும் வன பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
தரிசு நிலங்களில் சமூக காடுகள் உருவாக்கப்படும்
வன பாதுகாப்பு திட்டங்களில் குடிமக்கள் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்
கழிவுகளை அகற்றுவதில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
இமயமலை பாதுகாப்பிற்கு தனிநிதியம் உருவாக்கப்படும்
அறிவியல் / தொழில்நுட்பம்
உயிரி தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம்
அறிவியல் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களுக்கு நிலையான வகையில், உணவு, வேளாண், ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
பட்டினி மற்றும் ஊட்டச்சத்து இன்மை அகற்றப்படும்
வேலைவாய்ப்பில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்திற்கு சமமான வாய்ப்பு வழங்கப்படும்
அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்
உயிரி தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
தேசிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில், அரசின் லட்சியங்களை அடைய, சர்வதேச அளவிலான
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்
SOURCE: DINAMALAR

No comments:
Post a Comment