Tuesday, April 8, 2014

"தேசிய பாதுகாப்பில் இனி சமரசம் இல்லை' : பா.ஜ. தேர்தல் அறிக்கையில் தகவல்

நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஏராளமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தேசிய பாதுகாப்பில் இனி சமரசம் இல்லை':

பா.ஜ., தேர்தல் அறிக்கையில் தேசிய பாதுகாப்பு குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:தேசிய பாதுகாப்பு என்பது, எல்லைகளை மட்டும் பாதுகாப்பது அல்ல. ராணுவ பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, இணைய தள பாதுகாப்பு, எரிசக்தி, உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார பாதுகாப்பு என, அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது. கடந்த காலங்களில், பல அதிகார மையங்கள் இருந்ததால், தேசிய பாதுகாப்பு விஷயங்களில், சமரசம் செய்து கொள்ளப்பட்டு உள்ளன. அண்டை நாடுகளுடன், பதற்றமான உறவு, உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. எல்லை கோட்டுப்பகுதிகளில், ஊடுருவல்கள் தொடர்கின்றன. விமானப்படை மற்றும் கடற்படையில், பல விபத்துகள் ஏற்பட்டு, ராணுவ தளவாடங்கள் இழப்பு அதிகரித்து உள்ளன. பாகிஸ்தான் பின்னணி கொண்ட பயங்கரவாத அமைப்புகள், மத கலவரங்கள், நக்சல் தாக்குதல்கள் காணப்படுகின்றன. நாட்டின் கிழக்கு பகுதியில், சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளது. நாட்டின் தலைநகரத்திலேயே தாக்குதல்கள் நடக்கின்றன. இவை அனைத்தும், நாட்டின் நலனை கைவிட்டு விட்டதற்கான அறிகுறியாகவே தென்படுகிறது. நாட்டின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதால், நாட்டின் பாதுகாப்பும், மோசமான வடிவத்தை பெறும் வாய்ப்பும் உள்ளது.இப்பிரச்னையை, பா.ஜ., நன்கு உணர்ந்து உள்ளது. இதற்காக, பா.ஜ., சார்பில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள்.

உள்நாட்டு பாதுகாப்பு

காங்கிரசால், கைவிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் கையில் எடுக்கப்படும். தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ.,) வலுப்படுத்தப்படும். பயங்கரவாத வழக்குகளின் விசாரணை சரியான முறையில் மேற்கொள்ளப்படும்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் திருத்தி அமைக்கப்படும்
அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து புலனாய்வு அமைப்புகள் விடுவிக்கப்படும்
புலனாய்வு துறை நவீனப்படுத்தப்படும்
போலீஸ் துறைகளை நவீனப்படுத்தவும், நவீன தொழில்நுட்ப வசதிகளை அளிக்கவும், மாநில அரசுகளுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும்
மக்கள் பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படையை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும், சமூக பாதுகாப்பு , சுய பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிர்வாகத்திற்காக, குடிமகன்கள் இடம் பெறும் குழுக்கள் ஏற்படுத்தப்படும்
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் அளவில், தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) வலுப்படுத்தப்படும்
மாவோயிஸ்ட் பிரச்னையை கையாள்வதில், மாநில அரசுகள் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய, ஒரு தேசிய திட்டம் உருவாக்கப்படும். நக்சல் குழுக்களுடனான பேச்சு வார்த்தை, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தான் மேற்கொள்ளப்படும்
வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து, வேலை வாய்ப்புக்காக, பிற மாநிலங்களுக்கு செல்பவர்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்

நாட்டின் எல்லைகள் பாதுகாப்பு

ராணுவ தளவாடங்கள், இதர சேவைகள், நிர்வாகம் சீரமைப்பு மேற்கொள்ளப்படும்
முப்படைகளிலும், வீரர்கள் மற்றும் இதர ஊழியர்கள் பிரிவில், காலி பணிய இடங்கள் முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிரப்பப்படும்
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஒரு "ரேங்க்', ஒரு "பென்ஷன்' திட்டம் அமல்படுத்தப்படும்
போர்களில் உயிர் நீத்த நம் ராணுவ வீரர்களுக்காக, போர் நினைவிடம் ஏற்படுத்தப்படும்
கடற்கரை பாதுகாப்புக்காக, சிறப்பான கட்டமைப்புடன் கூடிய, தேசிய கடல்சார் ஆணையம் ஏற்படுத்தப்படும்
ராணுவ தளவாடங்கள் தேவையை விரைவில் பூர்த்தி செய்ய, உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய உற்பத்தி மேம்படுத்தப்படும்
எல்லை தாண்டிய பயங்கரவாதம் இரும்பு கரம் மூலம் ஒடுக்கப்படும்
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க, எல்லைப்பகுதி நிர்வாகம் மேம்படுத்தப்படும்
முப்படைகளில், ஆட்கள் தேவையை பூர்த்தி செய்ய, நான்கு ராணுவ பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும்
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மறு வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனிக்க, ஒரு கமிஷன் ஏற்படுத்தப்படும்
ராணுவ வீரர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்தே, தங்களின் ஓட்டுகளை பதிவு செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்
ராணுவம் வசம் உள்ள நிலங்கள், ராணுவ குடியிருப்பு பகுதிகளில் உள்ள நிலங்களை கணினி முறையில் பதிவு செய்யும் பணி துரிதப்படுத்தப்படும்
ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை திறன் வாய்ந்த நபர்கள் மூலமும் நவீன தொழில்நுட்பத்துடனும் மேற்கொண்டால், உலக அளவில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில், இந்தியா முன்னணி பெறும். இதற்காக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.,) வலுப்படுத்தப்படும். குறிப்பிட்ட ராணுவ தளவாட தொழிற் சாலைகளில், வெளிநாட்டு முதலீடு உட்பட தனியார் பங்களிப்பு மற்றும் முதலீடு ஊக்கப்படுத்தப்படும்

வெளியுறவு கொள்கை




சுயசார்பு இந்தியா

அண்டை நாடுகளுடன், நட்புரீதியான, ஒத்துழைப்புடன் கூடிய உறவை மேற்கொள்ள, காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு தவறி விட்டது.பல காலமாக, இந்தியாவின் நட்பு நாடுகளாக இருந்தவர்களுடனான உறவு உறைந்து போய் விட்டது. அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு இல்லை. தெளிவான போக்குக்கு பதில், குழப்பமான சூழ்நிலையே காணப்படுகிறது.எனவே, சுய சார்பு உள்ள, தன்னம்பிக்கை உள்ள இந்தியாவை உருவாக்குவோம். தேச நலனின் அடிப்படையில் தான், வெளியுறவு கொள்கை இருக்கும். பிற நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு மத்தியில், இந்தியா தனக்கான உரிய இடத்தை பெற வேண்டும். இதற்கு, இந்தியா புத்தொளி பெற வேண்டும்தெற்காசிய பகுதியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, அரசியல் நிலைத்தன்மை, முன்னேற்றம் மற்றும் அமைதி ஏற்பட வேண்டும் என, பா.ஜ., நம்புகிறதுநாட்டின் பாரம்பரியம், திறமை, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய, ஐந்து அம்சங்களின் உதவியோடு, உலக நாடுகள் மத்தியில், "பிராண்ட் இந்தியா' என்ற பெயர் நிலை நாட்டுவோம்

காவல் துறை




புலனாய்வு முறையில் மாற்றம்

சர்வதேச போலீசுக்கு இணையாக, இந்திய போலீஸ் துறையை கொண்டு வர, ஒருங்கிணைந்த யுக்தி வகுக்கப்படும்.
போலீசாருக்கு பயிற்சி அளிக்கவும், திறமையை உருவாக்கவும், வசதிகள் செய்யப்படும்
நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வந்து, போலீஸ் துறை, நவீனப்படுத்தப்படும்
புலனாய்வு தகவல்கள் பரிமாற்றம், குற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்த, போலீஸ் நிலையங்கள் இணைப்பு
குற்ற வழக்குகள் விசாரணையை விரைவாக்க புலனாய்வு முறைகள் மாற்றப்படும்
தொடர் பயிற்சி மூலம், புலனாய்வில் நிபுணத்துவம் ஏற்படுத்தப்படும்
தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு மூலம், சிறை துறை, நவீனப்படுத்தப்படும்
சைபர் குற்றங்களை கண்டுபிடித்து, தடுக்க, போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
கடலோர பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி விவாதிக்க, கடலோர மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும்
பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில், பொது மக்களை சேரும் விதத்தில், போலீஸ் துறையின் செயல்பாடுகள் அமைக்கப்படும்
போலீசாருக்கு, பணிச் சூழல் மற்றும் நலத் திட்டங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும்

சிறுபான்மையினர் நலன்




முஸ்லிம்களின் நலனுக்கு முன்னுரிமை

பா.ஜ., தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் மக்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் பற்றி கூறப்பட்டு உள்ளதாவது: ஒற்றுமையில் வேற்றுமைதான் இந்தியாவின் பலமாக பா.ஜ., கருதுகிறது. சிறுபான்மை சமூகத்தினரின் உயரிய கலாசாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் சமூக பொருளாதாரமும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் பெரும்பான்மை சிறுபான்மை சமூகத்தினர் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் ஏழ்மையில் வாடுகின்றனர். நவீன இந்தியாவில் அனை வருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அனைத்து, இனத்தவரும் இணைந்து பாடுபட வேண்டும்.
சிறுபான்மையின இளைஞர்களும், பெண்களும் கல்வி மற்றும் வேலைகளில் பாரபட்சமின்றி வாய்ப்பு பெறுவதை உறுதி செய்வோம்
சிறுபான்மை கல்வி நிறுவனங்களையும், அமைப்புகளையும் வலுப்படுத்தி நவீனப்படுத்துவோம்
தேசிய மதரசாக்கள் நவீனப்படுத்தும் திட்டங்கள் துவங்கப்படும்
சிறுபான்மையினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை உருவாக்குவோம்
வக்பு வாரியங்கள் மேம்படுத்தப்படும். வக்பு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்படும்
சிறுபான்மையினர் கலாசார, பாரம்பரிய சின்னங்கள் புதுப்பிக்கப்படும். ஆவணங்கள் கணினி
மயமாக்கப்படும்
உருது மொழி மேம்பாட்டை உறுதிப் படுத்துவோம். அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கை முறையை உறுதி செய்வோம்
மதத் தலைவர்களை கொண்ட குழு அமைத்து நல்லிணக்கம் நிலவ பாடுபடுவோம்

பெண்கள் நலம்




பெண்களுக்கு பள்ளியிலேயே தற்காப்பு பயிற்சி
அரசின் அனைத்து பிரிவுகளிலும், பெண்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அளிக்கும்
வகையில், அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்
பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், கல்வி அளிக்கவும், "பேட்டி பச்சோ- பேட்டி படோ' எனும், தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் துவக்கப்படும்
குடும்பங்களில், பெண் குழந்தைகளை ஊக்குவித்து அவர்களுக்கு உதவும் வகையில், சிறந்த திட்டங்களான, "பாலிகா சம்ருதி, லட்லி லட்சுமி மற்றும் சிரஞ்சீவி யோஜ்னா' வுடன், புதிய ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்படும்
கிராமப்புறங்களில் வாழும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த பெண்களின் நலனுக்கான, குறிப்பாக, ஊட்டச்சத்து மற்றும் கர்ப்ப காலத்திற்கான, பெண்கள் நலவாழ்வுதிட்டம் உருவாக்கப்படும்
பெண்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்காக, பிரத்யேக பெண்கள் ஐ.டி.ஐ.,க்கள் மற்றும் ஏற்கனவே உள்ள ஐ.டி.ஐ.,க்களில் பெண்கள் பிரிவுகள் துவக்கப்படும்
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பாக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படும்
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களின் மறுவாழ்வு மற்றும் இழப்பீட்டிற்கான நிதி விஷயத்தில், ஏற்பட்டுள்ள குறைகளை களைய, முன்னுரிமை அளிக்கப்படும்
ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் பெண்களுக்கு, மருத்துவ சிகிச்சை மற்றும் முக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கான நிதி ஏற்படுத்தப்படும்
பெண்கள் எளிதாக அணுகும் வகையில் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், பல்வேறு வகைகளில், பெண்கள் போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்
பள்ளி பாடத்திட்டத்தில், "தற்காப்பு' ஒரு பிரிவாக அறிமுகப்படுத்தப்படும்
பெண்கள் பாதுகாப்பிற்காக, தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்
பெண்களுக்காக, அனைத்து மகளிர் நடமாடும் வங்கி உருவாக்கப்படும்
பெண்களுக்கான, சிறப்பு திறன் பயிற்சி மற்றும் வர்ததக பராமரிப்பு பூங்கா உருவாக்கப்படும்
பெண்களுக்கான சிறப்பு வர்த்தக வாய்ப்பு மையம் உருவாக்கப்படும்
பெண்களுக்கிடையிலான தொடர்புகள் விரிவு படுத்தப்படுவதுடன்,பணியாற்றும் பெண்களுக்கான விடுதிகள்,மேம்படுத்தப்படும்
ஒவ்வொரு மாவட்டத்திலும், பெண்களுக்கான பிரத்யேக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்
அங்கன்வாடி பணியாளர்களின், பணிச்சூழல் ஆய்வு செய்யப்பட்டு, ஊதியம் உயர்த்தப்படும்
சொத்துரிமை, திருமண உரிமை மற்றும் திருமணமாகாமல், கணவன், மனைவியாக சேர்ந்து வாழும் உரிமை ஆகியவற்றில், பாலின பாகுபாடுகள் இருப்பின் நீக்கப்படும்
சேரி வாழ் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கான, சிறப்பு வயது வந்தோர் கல்வித்திட்டம் துவக்கப்படும்
குறைந்த வட்டியில், பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு, கடன் வசதி வழங்குவது உறுதி செய்யப்படும்
ஏழை பெண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண் குழந்தைகள் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் ஏற்படுத்தப்படும்
பெண்கள் கருக்கலைப்பு, வரதட்சணை, குழந்தை திருமணம், கடத்தல், பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் குடும்ப வன்முறை போன்றவற்றை கண்டுபிடிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் நல்வாழ்விற்கு தேவையான மின்சார வசதி, குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் அனைத்து வீடுகளிலும் ஏற்படுத்தப்படும்

கறுப்பு பணம்




சிறப்பு குழு
வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்காக, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுவதுடன், புதிய சட்டம் இயற்றவோ அல்லது சட்ட திருத்தம் மேற்கொள்ளவோ நடவடிக்கை எடுக்கப்படும்.கறுப்பு பணம் குறித்த தகவல்களை பெறுவற்காக, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசுகளுடன், ஆக்கப்பூர்வமான வகையில் ஆலோசனை நடத்தப்படும்.

ஊழல் ஒழிப்பு




வெளிப்படை கொள்கை
காங்., தலைமையிலான மத்திய அரசு, அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. காங்., ஆட்சியின் மெகா ஊழல், தேசிய அளவிலான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்கண்ட நடவடிக்கைகள் மூலம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
இணையம் மூலம் அரசு நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
நிர்வாக அடிப்படையிலான, வெளிப்படையான கொள்கைகள் உருவாக்கப்படும்.
தற்போதைய வரி விதிப்பு முறை, வரி செலுத்துவோருக்கு வெறுப்பூட்டும் விதமாக உள்ளன. ஊழலுக்கு, இது முக்கிய காரணமாக உள்ளது. எனவே, வரி விதிப்பு முறையை முறைப்படுத்தவும், எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

SOURCE: DINAMALAR

No comments:

Post a Comment