திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே, இந்தக் கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொலையுண்டவரின் மனைவியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் காந்திநகரைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜீவா என்ற ஜீவராஜ் (37). இந்து முன்னணி நகரச் செயலரான இவர், சங்கரன்கோவில் நகர்ப்பகுதியிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள பாட்டத்தூரில் வசித்து வந்தார். அங்கே கழுகுமலை சாலையையொட்டி முனீஸ்வரர் ஆலயம் அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவருக்கு அய்யம்மாள் (32) என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், அய்யம்மாள் குடும்பத் தகராறு காரணமாக ஜீவாவை பிரிந்து தன் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஜீவா தன் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அவரது வீட்டுக்குச் சென்ற மர்ம நபர்கள், அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
தகவலறிந்ததும் நகர காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதுபற்றி தெரியவந்ததும் ஜீவாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அதற்குள் அங்கிருந்து ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதையடுத்து, ஜீவாவின் உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் ஆய்வாளர் பிரபாகரன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நாயர், எஸ்.ஏ.பி. அரவிந்தன், டி.எஸ்.பி.க்கள் கலிவரதன், வானமாமலை, பரமசிவன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சங்கரன்கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காரணம் என்ன? ஜீவா மீது கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வழிப்பறி, தகராறு, கொலை முயற்சி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 12 வழக்குகள் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2003 மற்றும் 2009ஆம் ஆண்டில் இருமுறை இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில்தான் முனீஸ்வரர் ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வந்தார். தற்போது அவர் இந்து முன்னணியில் சேர்ந்து நகரச் செயலராகவும் பணியாற்றி வந்தார்.
மனைவி கைது: இதற்கிடையே, ஜீவா கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரது மனைவி அய்யம்மாளை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment