Friday, April 11, 2014

"திருமணமானவர்' என்று மோடி அறிவிப்பு

தான் திருமணமானவர் என்றும் தனது மனைவி பெயர் ஜசோதாபென் என்றும் வதோதரா தொகுதியில் புதன்கிழமை தாக்கல் செய்த வேட்பு மனுவில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களின்போது தாக்கல் செய்த வேட்புமனுக்களில், மனைவி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை பூர்த்தி செய்யாமல் காலியாக விட்டுவந்த மோடி, தற்போது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக மனைவியின் பெயரை அறிவித்துள்ளார்.
ஆனால், தனது மனைவிக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்று விவரம் தனக்குத் தெரியாது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
"மோடி திருமணமானவரா? என்பதை அறிவிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எழுப்பி வந்த சர்ச்சைக்கு மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சம்பிரதாய திருமணம்: இந்நிலையில், மோடியின் திருமணம் தொடர்பாக பாஜக வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் கூறியிருப்பதாவது:
""ஏழைக் குடும்பத்தில் நாங்கள் பிறந்தோம். எங்களது பெற்றோர் அதிகம் படிக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் இருந்த 6 சகோதரர்களில் மோடி வித்தியாசமானவர்.
அவரது இளம் வயதில், ஜசோதாபென் என்பவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அது சம்பிரதாய நடைமுறைக்காக நடத்தப்பட்ட திருமணமாகும். அந்தத் திருமணம் நடைபெற்றவுடன் நரேந்திர மோடி வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்னர் குடும்பத்தாருடன் தொடர்பு வைத்து கொள்ளவில்லை.
நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதே அவரது வாழ்நெறி. உலகையே குடும்பமாகக் கருதிய காரணத்தால் நாட்டுக்குச் சேவை செய்ய மோடி தனது வீட்டை வீட்டுச் சென்றார்.
சுமார் 45-50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவத்தை மோடியின் தற்போதைய வாழ்க்கை நிலையுடன் ஒப்பிடக் கூடாது.
தற்போது ஜசோதாபென் அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். கல்வித்துறை ஒன்றில் பணியாற்றியும் வருகிறார்'' என்று சோமாபாய் தெரிவித்துள்ளார்.
மோடியின் மற்றொரு சகோதரர் பிரஹலாத் மோடி கூறுகையில், "தான் திருமணமானவர் என்பதை மோடி எப்போதும் மறுக்கவில்லை. இது குறித்து தேர்தல் வேட்புமனுக்களில் முன்பு குறிப்பிடாதது அவருடைய தனிப்பட்ட விருப்பமாகும்' என்று தெரிவித்தார்.

மோடிக்கு எதிராக வாக்களியுங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்
தனது மனைவியின் உரிமைகளை மறுக்கும் மோடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் செய்துள்ள பதிவில், "திருமணமானவர் என்று மோடி ஒப்புக்கொண்டுள்ளார். தனது மனைவியின் உரிமைகளை மறுக்கும் மோடியை பெண்கள் எப்படி நம்புவார்கள்? மோடிக்கு எதிராக வாக்களியுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனது மனைவியின் சொத்து விவரங்கள், பான் கார்டு ஆகியவற்றின் விவரங்கள் தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ள மோடியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வேட்புமனு பரிசீலனையின் போது மோடிக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி கோரிக்கை விடுத்தார். அதை மாவட்டத் தேர்தல் அதிகாரி வினோத் ராய் நிராகரித்துவிட்டார்.

Source: Dinamani

No comments:

Post a Comment