Sunday, March 23, 2014

கமலிடம் ஆலோசனை பெற்ற மோகன்லால்!


கமலிடம் ஆலோசனை பெற்ற மோகன்லால்!
ஜில்லா படத்திற்கு பின், இனி, தமிழ் சினிமாவிலும், கூடுதல் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறார் மோகன்லால். அதனால், மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தபோது, உடல் எடை விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த அவர், இப்போது தமிழ் நடிகர்கள் உடம்பை சீராக பராமரித்து வைத்திருப்பதைப் பார்த்து, தானும், உடல் எடையை குறைத்து வருகிறார். இது குறித்து, விஸ்வரூபம் - 2 படத்திற்காக, உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கமலிடம் ஆலோசனை பெற்றுள்ளார் மோகன்லால். அதையடுத்து, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று தீவிரமடைந்துள்ள மோகன்லால், இன்னும், சில மாதங்களில் இளவட்ட ஹீரோ போன்று, ஸ்லிம்மாக மாறி, கமலை சந்தித்து, இன்ப அதிர்ச்சி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
--சி.பொ.,

பூஜாகுமார் அறிவிப்பு!
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன், காதல் ரோஜாவே என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானவர் பூஜாகுமார். அதன்பின், தமிழில் படங்கள் கிடைக்காததால், பாலிவுட், ஹாலிவுட் என்று, ஏராளமான படங்களில் நடித்து வந்த பூஜாகுமாரை, மீண்டும், விஸ்வரூபம் படம் மூலம், தமிழுக்கு அழைத்து வந்துள்ளார் கமல். அதையடுத்து, அதன் இரண்டாம் பாகத்திலும், பூஜாகுமாரை நடிக்க வைத்து, மெகா நடிகையாக்கி விட்டார். இதனால், அவரை நெருங்க, மற்ற படாதிபதிகள், தயங்கி நிற்கின்றனர். ஆனால், இந்த விஷயம் பூஜாவின் காதுக்கு சென்ற போது, 'கமலுடன் நடித்திருப்பதால், எனக்கு தமிழில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மற்றபடி, நானும் மற்ற நடிகைகள் போன்று தான், படங்களின் பட்ஜெட்டை பொறுத்து, சம்பளம் பெற்று நடிப்பேன். அதனால், என்னை தாராளமாக அணுகலாம்...' என்று கோலிவுட்டுக்கு அறிவித்துள்ளார் பூஜாகுமார். சமர்த்து சந்தியில் நிற்கிறது!
--எலீசா

ஒரு வரிச் செய்திகள்!
* விஜய்யின், தலைவா படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்த பாலிவுட் நடிகை ராகினி நந்துவானி, மோகன்லாலுடன், ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார்.
* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய், அடுத்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
* பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றி வந்த மணிரத்னம், தன் புதிய படத்தில், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் இணைகிறார்.
* இனம் படத்தில், இலங்கை போரில் நசுங்கிப்போன மனிதநேயத்தை பற்றி, கதை செய்துள்ளார் சந்தோஷ் சிவன்.
* 'அபூர்வ நாயகன்' என்ற பெயரில், கமல்ஹாசனை பற்றிய புத்தகம் ஒன்றை, அவரது ரசிகர்கள் ெவளியிட்டுள்ளனர்.
* ஷகீலாவின் சுயசரிதையில், நாயகியாக நடிக்க மறுத்து, கோலிவுட் நடிகைகள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
* சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த, ஜெய், சுவாதி இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும், வடகறி படத்தில், ரொமான்ஸ் காட்சிகளில், இளசுகளுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடித்துள்ளனர்.

கறுப்பு பூனை!
நேரம் நடிகையை லவ்வி வந்த ஜெயமான நடிகர், மேற்படி நடிகை, தன்னை கழட்டி விட்டதால், தேவதாஸ் கோலம் பூண்டிருந்தார். ஆனால், மீண்டும், அவருடன் ஜோடி போட்டிருக்கும், சுப்ரமணியபுரம் நடிகை, நடிகரை அரவணைத்துள்ளார். இதனால், தேவதாஸ் கோலத்தை கலைத்து விட்ட நடிகர், அம்மணியுடன், தேவகானம் பாடத் துவங்கியிருக்கிறார்.
ஆளுங்கட்சியின் அதிருப்திக்கு ஆளாகிஇருக்கும் தளபதி நடிகர், இனி, அரசியல் பிரவேசமும் இல்லை; அரசியல் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். விளைவு, எதிர்காலத்தில், எப்படியும், நடிகர் அரசியலுக்கு வருவார்; அதை வைத்து நாலு காசு சம்பாதிக்கலாம் என்று நினைத்து, அவரது நற்பணி மன்றத்தில் அங்கம் வகித்திருந்த பெருவாரியான ரசிகர்கள், பிரபல கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதனால், சத்தமில்லாமல், தளபதியின் கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது.

'சொர்ணாக்கா'வாக மாறும் தமன்னா!
தொடர்ந்து மரத்தை சுற்றி டூயட் பாடிக் கொண்டேயிருப்பது தமன்னாவுக்கு போரடித்து விட்டது. அதனால் தான், அனுஷ்கா நடித்து வரும், பாகுபாலி படத்தில், ஒரு மாறுபட்ட, சரித்திர கால பெண் வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி, இனிமேல், பாசிட்டிவான வேடங்களோடு, நெகடிவான வேடங்களிலும் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ள தமன்னா, 'அதிரடியான, வில்லி வேடம் என்றாலும், நடிக்கத் தயாராக இருக்கிறேன்...' என்று, கூறி வருபவர், தேவைப்பட்டால், சொர்ணாக்கா ரேஞ்சுக்கும், ஆவேசமான வில்லியாக நடிக்கவும் தயாராக உள்ளதாக கூறுகிறார். ஆனால், இயக்குனர்கள் தான், 'பஞ்சுமிட்டாய் தமன்னாவை எப்படி பயங்கரமாக காட்ட முடியும்...' என்று, தயங்கி நிற்கின்றனர். அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு அரிவாள்!
-- எலீசா.

பெண் வேடத்தில் முன்னணிநடிகர்கள்!
அங்காடித் தெரு மற்றும் அரவான் படங்களை தொடர்ந்து, வசந்தபாலன் இயக்கியுள்ள படம், காவியத்தலைவன். 1930௦களில் நடைபெற்று வந்த, நாடகத் துறைகளை மையப்படுத்தி, இப்படம் தயாராகியுள்ளது. சித்தார்த், பிருத்விராஜ் நடித்திருக்கும் இப்படத்தில், சந்தானத்திற்கும் முக்கிய வேடம். அந்த வகையில், அவர்கள் மூன்று பேருமே ,பெண் வேடமேற்றும் நடித்துள்ளனர். 

source:dinamalar

No comments:

Post a Comment