சிட்டகாங்,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
20 ஓவர் கிரிக்கெட்
5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று நடக்கிறது. சூப்பர்–10 சுற்றில் ஆடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப்2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த நிலையில் சிட்டகாங்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா–நியூசிலாந்து (குரூப்–1) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டுபிளிஸ்சிஸ்
தசைப்பிடிப்பு காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுபிளிஸ்சில் இந்த ஆட்டத்தில் களம் திரும்பினார். ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், தென் ஆப்பிரிக்க அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீ காக், ஹாசிம் அம்லா ஆகியோர் களம் இறங்கினார்கள்.
தொடக்க ஆட்டக்காரர் டீ காக் 4 ரன்னிலும், அடுத்து களம் கண்ட கேப்டன் டுபிளிஸ்சிஸ் 13 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
டுமினி அதிரடி
4–வது விக்கெட்டுக்கு அம்லாவுடன், ஜோடி சேர்ந்த டுமினி அதிரடி காட்டினார். அவரது அசுர வேக ஆட்டத்தில் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. நிலைத்து நின்று ஆடிய ஹசிம் அம்லா 40 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 41 ரன் எடுத்த நிலையில் கோரி ஆண்டர்சன் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் மில்லர் (6 ரன்), அல்பி மோர்கல் (13 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. டுமினி 43 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 86 ரன்னும், ஸ்டெயின் ஒரு பந்தில் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
171 ரன்கள் இலக்கு
கடைசி 5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 70 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி, கோரி ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டும், மில்ஸ், நாதன் மெக்கல்லம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் ஆகியோர் களம் கண்டனர். இருவரும் அடித்து ஆடினார்கள். 5–வது ஓவரில் வில்லியம்சன் 2 பவுண்டரியும், ஒரு சிக்சருடன் விரட்டினார். 6–வது ஓவரில் மார்ட்டின் கப்தில் 3 பவுண்டரிகள் விளாசினார்.
டெய்லர் அசத்தல்
அணியின் ஸ்கோர் 7.1 ஓவர்களில் 57 ரன்னாக இருந்த போது மார்ட்டின் கப்தில் 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து களம் கண்ட கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 4 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து களம் கண்ட ராஸ் டெய்லர், தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்து வீச்சை அசத்தலாக அடித்து ஆடினார். மோர்னே மோர்கல் வீசிய 12–வது ஓவரில் ராஸ் டெய்லர் தொடர்ந்து 3 சிக்சர்கள் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் கனே வில்லியம்சன் 35 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
முட்டுக்கட்டை போட்ட ஸ்டெயின்
15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்னை தொட்ட நியூசிலாந்து அணி அதன் பின்னர் அந்த உத்வேகத்தை தொடர முடியாத அளவுக்கு, தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், ஸ்டெயின் ஆகியோர் தங்களது அபார பந்து வீச்சின் மூலம் முட்டுக்கட்டை போட்டதுடன், விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் வீசினார். முதல் பந்தில் லுக் ரோஞ்ச் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த 2 பந்துகளை ரன் எடுக்காமல் வீணடித்த நாதன் மெக்கல்லம் 4–வது பந்தில் பவுண்டரி அடித்தார். 5–வது பந்தில் நாதன் மெக்கல்லம் அவுட் ஆனார்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
இதனால் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 3 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தில் ராஸ் டெய்லர் ரன்–அவுட் ஆனார். எனவே நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ‘திரில்’லான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஸ்டெயின் 4 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டும், அல்பி மோர்கல் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணி கடைசி 5 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 5 விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் வெற்றி
தென் ஆப்பிரிக்க அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி கண்டு இருந்தது. முதலாவது ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று இருந்த நியூசிலாந்து அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
ஸ்கோர்போர்டு தென் ஆப்பிரிக்கா
டீ காக் (சி) ரோஞ்ச் (பி) மில்ஸ் 4
ஹசிம் அம்லா (சி)அண்ட் (பி) ஆண்டர்சன் 41
டுபிளிஸ்சிஸ் (சி) நாதன் மெக்கல்லம் (பி) டிம்சவுதி 13
டிவில்லியர்ஸ் (பி) நாதன்மெக்கல்லம் 5
டுமினி (நாட்–அவுட்) 86
மில்லர் (சி) அண்ட் (பி) ஆண்டர்சன் 6
அல்பி மோர்கல் (பி) டிம்சவுதி 13
ஸ்டெயின் (நாட்–அவுட்) 1
எக்ஸ்டிரா 1
மொத்தம் (20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 170
விக்கெட் வீழ்ச்சி:
1–16, 2–32, 3–42, 4–97, 5–131, 6–159.
பந்து வீச்சு விவரம்:
மில்ஸ் 4–0–29–1
மெக்லகன் 4–0–30–0
டிம்சவுதி 4–0–46–2
நாதன்மெக்கல்லம் 4–0–24–1
ஆண்டர்சன் 3–0–28–2
வில்லியம்சன் 1–0–13–0
நியூசிலாந்து
மார்ட்டின் கப்தில் (சி) டீ காக் (பி) அல்பிமோர்கல் 22
வில்லியம்சன் (சி) டிவில்லியர்ஸ் (பி) ஸ்டெயின் 51
பிரன்டன் மெக்கல்லம் (ஸ்டம்பிங்) டீ காக் (பி) இம்ரான் தாஹிர் 4
ராஸ் டெய்லர் (ரன்–அவுட்) 62
காலின் முன்ரோ (சி) அம்லா (பி) இம்ரான் தாஹிர் 7
ஆண்டர்சன் (சி) மில்லர் (பி) ஸ்டெயின் 7
லுக் ரோஞ்ச் (சி) டீ காக் (பி) ஸ்டெயின் 5
நாதன் மெக்கல்லம் (சி) டுபிளிஸ்சிஸ் (பி) ஸ்டெயின் 4
டிம் சவுதி (நாட்–அவுட்) 0
எக்ஸ்டிரா 6
மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 168
விக்கெட் வீழ்ச்சி:
1–57, 2–66, 3–117, 4–140, 5–148, 6–164, 7–168, 8–168.
பந்து வீச்சு விவரம்:
டுமினி 3–0–30–0
சோட்சோப் 4–0–29–0
ஸ்டெயின் 4–0–17–4
மோர்னேமோர்கல் 3–0–50–0
அல்பிமோர்கல் 2–0–13–1
இம்ரான் தாஹிர் 4–0–27–2
SOURCE: DAILY THANDHI

No comments:
Post a Comment