பெலோ ஹரிஜான்டே: உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் பிரேசிலை, 1-7 என ஜெர்மனி அணி உதைத்து வெளியேற்றியது.
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் நட்சத்திர வீரர் நெய்மர், கேப்டன் தியாகோ சில்வா இல்லாமல் உள்ளூர் பிரேசில் அணி, முல்லர், குளோஸ் என பலமான ஜெர்மனியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதல் ‘அடி’:
போட்டி துவங்கிய முதல் நொடி முதல் ஜெர்மனியின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. 11வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பில் அந்த அணியின் டோனி குரூஸ் அடித்த பந்தை நட்சத்திர வீரர் முல்லர் மிகச் சாதரணமாக கோல் அடித்தார். தொடர்ந்து சில நிமிட இடைவேளையில் ஜெர்மனியின் குளாஸ் (23வது நிமிடம்)இரண்டாவது கோல் அடித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து பிரேசில் வீரர்கள் மீள்வதற்குள் துடிப்பாக செயல்பட்ட ஜெர்மனியின் டோனி குரூஸ் (24, 26) அடுத்ததடுத்து இரட்டை அடி கொடுத்தார். தொடர்ந்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட மற்றொரு ஜெர்மனி வீரர் சமி கேடிரா (29) பிரேசிலுக்கு 5வது அடி கொடுத்து, அந்நாட்டு ரசிகர்களின் இதயத்தை நொறுக்கினார். இதன் மூலம் முதல் பாதியில் ஜெர்மனி அணி 5-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.

தவிப்பான இரண்டாவது பாதி:
பின் சுவாரஸ்யம் இல்லாமல் துவங்கிய இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து சொதப்பலாக ஆடிய பிரேசில் வீரர்கள் ஜெர்மனி வீரர்களிடம் இருந்து ப்ந்தை தட்டிப்பறிக்க கூட முடியாமல் தட்டுதடுமாறினர். இந்நிலையில் ஜெர்மனியன் சூரில் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடிக்க, வெறுத்துப்போன பிரேசில் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற துவங்கினர். தொடர்ந்து மிரட்டிய ஜெர்மனி அணிக்கு சூரில் (79) 7வது கோல் அடித்து ஜெர்மனியின் ரசிகர்களின் ஆரவாரத்தையும், உற்சாகத்தையும் அதிகரித்து சொர்கத்திற்கே அழைத்துச்சென்றார். நொறுங்கிய நெஞ்சத்துடன் களத்தில் தொடர்ந்து போராடிய பிரேசில் அணியின் எல்லா கோல் முயற்சிகளயுைம் அசராமல் முறியடித்த ஜெர்மனி கோல் கீப்பர் மானுவல் நீயூர் மேலும் தலைவலியை ஏற்படுத்தினார். போட்டியின் கடைசி வினாடியில் பிரேசில் அணிக்கு ஆஸ்கர் (90) ஒரு கோல் மட்டும் அடித்தார்.

8வது பைனல்:
முடிவி்ல, ஜெர்மனி அணி, 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பை தொடரின் பைனலுக்கு 8வது முறையாக முன்னேறி புதிய உலக சாதனை படைத்தது. பிரேசில் அணி, தனது கால்பந்து வரலாற்றில் கடந்த 94 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரும் தோல்வியை சொந்த ரசிகர்கள் முன்னிலையில் சந்தித்தது. தவிர, கோப்பை வெல்லு்ம் வாய்ப்பையும் பரிதாபமாக இழந்தது. இருப்பினும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரேசில் அணி இடம் பெற்றுள்ளது.
போட்டியின் 23வது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மனியின் குளோஸ், உலக கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். கடந்த 2002 உலக கோப்பை தொடர் முதல் இவர் இதுவரை 23 போட்டியில் பங்கேற்று 16 கோல்கள் அடித்துள்ளார்.

இப்பட்டியலில் ‘டாப்-5’ வீரர்கள்
பெயர்(அணி) போட்டி கோல்கள்
குளோஸ் (ஜெர்ளனி) 23 16
ரொனால்டோ (பிரேசில்) 19 15
கிரட் முல்லர் (ஜெர்மனி) 13 14
ஜஸ்ட் பான்டெயின் (பிரான்ஸ்) 6 13
பீலே (பிரேசில்) 14 12
சரியான பதிலடி:
பிரேசில் அணியை 7-1 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய ஜெர்மனி அணி கடந்த 2002 உலக கோப்பை தொடரின் பைனலில் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.
No comments:
Post a Comment