Tuesday, July 8, 2014

கமலுக்கு தசைபிடிப்பு ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு நிறுத்தம்!

கமலுக்கு தசைபிடிப்பு ஏற்பட்டுள்ளதால் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
விஸ்வரூபம் 2–ம் பாகம் படத்தை முடித்து விட்டு ‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் நடிக்கிறார். இது முடிந்ததும் மலையாள படமான ‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க உள்ளார். ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடக்கிறது. பெங்களூர், ஐதராபாத், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படபிடிப்பு நடக்கிறது. ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டு கமல் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன் இப்படத்துக்கான சண்டை காட்சி படமாக்கப்பட்டதாகவும், இதில் கமல் நடித்தபோது காலில் அடிப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் அவருக்கு வலி ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதையடுத்து ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி கமலிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். உத்தம வில்லன் பட டைரக்டர் ரமேஷ் அரவிந்த், இதுகுறித்து கூறும்போது, கமலுக்கு லேசான தசை பிடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்காக ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார். காயம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
‘விஸ்வரூபம் 2’ படம் ரிலீசாகாமல் தாமதமாகி வருகிறது. இதுகுறித்து கமல் கூறும்போது படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்கள் உள்ளன. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. எனவே படம் வெளியாக கொஞ்சம் தாமதமாகும் என்றார். ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு முன்பு உத்தம வில்லன் படம் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment