Monday, July 7, 2014

தேவையற்ற கிசுகிசுக்கள் நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார் ப்ரியா ஆனந்த்.






தமிழ், தெலுங்கில் முன்னணி வரிசையில் இருந்த தமன்னாவுக்கு ஹிந்தி சினிமா கைக் கொடுக்கவில்லை. அறிமுக படமான "ஹிம்மத்வாலா' எதிர்பார்ப்பை நிறைவேற்றாத நிலையில், "ஹம்ஷெகல்ஸ்' படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்தார். இப்படமும் கரை சேரவில்லை. தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த தமன்னாவை  பாலிவுட் கை விட்டது. இதனிடையே பாலிவுட் ஹீரோக்களின் கவனத்தை கவர புதிய திட்டங்கள் வகுத்து வருகிறார். படு கவர்ச்சி வாய்ப்பு தருமா? அல்லது எப்போதும் ஏற்ற வேடங்களே பொருந்துமா? என்றெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்து வருகிறார். முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்பதெல்லாம் பாலிவுட்டில் எடுபடாது என்பதை உணர்ந்த தமன்னா, இதன் முதற் கட்டமாக படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி பாலிவுட்டில் பரப்பி விடவும் திட்டமிட்டுள்ளாராம்.
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் "அமரகாவியம்' படத்தின் இசையை வெளியிட த்ரிஷாவும், நயன்தாராவும் சேர்ந்து மேடை ஏறியதுதான் கடந்த வார கோலிவுட்டின் சிறப்பு செய்தி. இதில் கூட்டாக மேடை ஏறிய த்ரிஷா, நயன்தாரா கூட்டணி மாறி மாறி ஆர்யாவை புகழ்ந்ததுதான் விழாவின் ஹைலெட். "" ஆர்யா இனிமையான மனிதர். உயர்ந்த பண்பாளர். எல்லா நடிகைகளுக்கும் அவரைப் பிடிப்பதற்குக் காரணம். எல்லோரிடமும் அவர் ஒரே மாதிரியாகப் பழகுவதுதான்'' என த்ரிஷா சிலாகிக்க, ""சினிமா வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். அந்த பிரச்னைகளை யாரிடமாவது மனம் விட்டு சொல்லத் தோன்றும். ஆனால் அப்படியொரு நபர் கிடைப்பதில்லை. அந்த இடத்தில் ஆர்யா இருப்பதுதான் எனக்கு ஸ்பெஷல். ஆர்யா நல்ல நண்பர் என்பது மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. இதுவரை எந்த பொது விழாக்களிலும் கலந்து கொள்ளாத நான், இப்போது ஆர்யாவுக்காக வந்திருக்கிறேன்'' என நயன்தாரா மனம் திறக்க, நெகிழ்வு புன்னகை சிந்தியிருக்கிறார் ஆர்யா.
நேர்த்தியான கதை அமைப்புகள், கச்சித கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மம்முட்டி, எப்போதும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவது வழக்கம். இவர் வாய்ப்பு கொடுத்து சமீபத்தில் ஹிட்டான இயக்குநர்களில் லால் ஜோஷ், ஆஷிக் அபு, அன்வர் ரஷித், அமல் நீரத் உள்ளிட்ட இயக்குநர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிலையில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த 7 படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி உள்ளன. இதனால் அதிர்ச்சியாகியுள்ள மம்முட்டி, இப்போது கதை தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
பாவனாவிடமிருந்து மீண்டும் ஒரு கல்யாண அறிவிப்பு... ""நான் ஒருவரை விரும்பிக் கொண்டிருக்கிறேன். அது பற்றி சொல்லும் நேரம் இது இல்லை. இந்த விருப்பம் திருமணத்தில் முடியுமா? இல்லையா? என்பதை பற்றி சொல்ல முடியாது. என் திருமணம் அடுத்த வருடத்தில் நடக்கலாம். சக நடிகைகள் திருமணம் செய்கிறார்கள் என்பதற்காக நானும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அப்படியொரு முடிவை எப்போதும் நான் எடுக்க மாட்டேன். எனக்கு ஒரு பிரச்னை என்றால் என் குடும்பம்தான் என் முன் நிற்கும். மற்றவர்கள் அல்ல. மற்றவர்கள் சொல்வதைக் கேட்பேன். ஆனால் முடிவை நான் மட்டும்தான் எடுப்பேன். ஏனென்றால் நான் எனக்காக வாழ்கிறேன். திருமணத்துக்குப் பின் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. திருமணம் ஆனவர்கள் நடிக்காமல் இருக்கிறார்களா என்ன? அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நான் முழுவதுமாக நடிப்பில் இருந்து விலக மாட்டேன். சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டே இருப்பேன். நடிப்பது என் உரிமை. சுதந்திரமும் கூட.'' திருமணச் செய்திகள் குறித்த தன் சர்ச்சைக்கு தன் டிவிட்டர் பக்கத்தில் தன் குரலை பதிவு செய்துள்ளார் பாவனா.
மற்ற மொழிகளில் தன் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற படங்கள் தமிழிலும் வெளியாக வேண்டும் என்பதில் குறிப்பாக நடிகைகள் ஆர்வம் செலுத்துவதுண்டு. இந்த வரிசையில் சமந்தா, அஞ்சலி இருவரும் இணைகின்றனர். மகேஷ்பாபுவின் ஜோடியாக இருவரும் நடித்து தெலுங்கில் வெற்றி பெற்ற "சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு' என்ற படம் தமிழில் "ஆனந்தம் ஆனந்தமே' என்ற பெயரில் டப் ஆகிறது. காதல், காமெடி, ஆக்ஷன் மூன்றும் சரிவிகிதத்தில் கலந்து உருவான இப்படம் சமீபத்திய தெலுங்கு சினிமாக்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ள படம். மகேஷ்பாபுவின் ஹீரோயிஸத்துக்கு தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பு உள்ளதாலும், சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருப்பதாலும் இப்படத்தை தமிழில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த இன்னிங்க்ஸூக்கு காத்திருக்கும் அஞ்சலிக்கும் இந்த படம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தேவையற்ற கிசுகிசுக்கள் பரவி வருவதால், நெருங்கிய நண்பர்களின் பிறந்த நாள் விழாக்களில் கூட கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார் ப்ரியா ஆனந்த். நள்ளிரவு விருந்துகளில் பொழுதை கழிக்கும் பழக்கம் சமீபமாக தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, பிந்து மாதவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை விருந்து நிகழ்ச்சிகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது. விருந்து நிகழ்ச்சிகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன் இணைய தள பக்கங்களில் வெளியிடுவதால், மீடியாக்களில் கிசுகிசுக்களை கொண்டு வரும் என்பதால், நடிகர், நடிகைகள் இது போன்ற விருந்துகளில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். ஆனால் ப்ரியா ஆனந்த்துக்கு சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு புகைப்படம் அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து ""என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்கள் எவையும் உண்மையல்ல. என்னைப் பற்றி எப்படி பேசினாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் யாருடைய அழைப்பை ஏற்றும் எந்தவித பார்ட்டிக்கும் போக மாட்டேன் என்பதுதான் உண்மை. ஆனாலும் என்னைப் பற்றி வதந்திகள் பரவுகின்றன என்பதுதான் புதிர்'' என்கிறார் ப்ரியா ஆனந்த்.

No comments:

Post a Comment