16-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
புதிய மக்களவையின் முதலாவது கூட்டத்தொடருக்கு முன், தற்காலிக அவைத்தலைவர்
தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இந்தப் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த,
அவையின் மூத்த உறுப்பினர் கமல்நாத் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தார்.
அதன்படி தற்காலிக பேரவைத் தலைவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
தனது மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பிறகு காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் புதிய மக்களவை கூட்டம்
தொடங்கியது.
முன்னதாக,நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம்
பேசுகையில், மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி
செய்யும் வகையில் ஜனநாயக கோயிலான நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அனைத்து
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என கூறினார்.
நாடாளுமன்றம் கூடியவுடன் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி
செலுத்தினர். மவுன அஞ்சலிக்குப் பின்னர் அவை நாள் முழுவதும்
ஒத்திவைக்கப்பட்டது.
இன்று முதல், வரும் 11-ம் தேதி வரை முதல் கூட்டத்தொடரை நடத்த பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல்
அளித்தது. புதிய பேரவைத் தலைவர் வரும் 6-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட
உள்ளார்.
ஜூன் 9-ல் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி உரையாற்றுவார். அதன்பிறகு தனித்தனியாக நடக்கும் மக்களவை மற்றும்
மாநிலங்களவை கூட்டங்களில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும். இதற்கு பதில் அளித்து ஜூன் 10, 11
ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பதவியேற்ற நாளிலேயே எதிர்பாராத
விதமாக உறுப்பினர்கள் மரணம் அடைந்த சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளன.
ஆனால், மக்களவை தேர்தலுக்குப் பின் கூடும் முதல் கூட்டத்தொடர் இதுபோல் ஒரு துக்கத்தை சந்தித்திருக்காது எனக் கருதப்படுகிறது.
SOURCE: THE HINDU


No comments:
Post a Comment