Saturday, April 12, 2014

ஜெய்யுடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா!

ஏ.ஆர்.முருகதாஸின் பட்டறையில் இருந்து வந்தவர் சரவணன். எங்கேயும் எப்போதும் படம் மூலம் இயக்குனரான இவர், அடுத்து விக்ரம் பிரபுவைக் கொண்டு இவன் வேற மாதிரி என்ற படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதனால் அடுத்தபடியாக அவர் இயக்கத்தில் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த சில முன்னணி ஹீரோக்கள் ஓட்டம் பிடித்து விட்டனர்.
அதனால், மறுபடியும் தனது முதல் பட நாயகன் ஜெய்யை வைத்தே தனது புதிய படத்தை தொடங்கியிருக்கிறார் சரவணன். அதேபோல் இந்த படத்தில் அஞ்சலியைத்தான் நடிக்க வைக்க நினைத்திருந்தாராம். ஆனால். அவரை தொடர்பு கொண்டபோது, இப்போது நான் கோடம்பாக்கத்துக்கு வந்தால் பல பஞ்சாயத்துக்களில் கைகட்டிநிற்க வேண்டியதிருக்கும். அதனால் என்னை விட்டு விடுங்கள் என்று நைசாக நழுவி விட்டாராம்.
அதனால், இப்போது விஸ்வரூபம் நாயகி ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆனால், ஆண்ட்ரியா நாயகி என்றதும் அதிர்ந்து போனாராம் ஜெய். காரணம், அவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது. ஆனால் ஆண்ட்ரியாவுக்கு ஆங்கிலம்தான் தெரியும். இதனால் எப்படி அவருடன் நடிப்பது என்று பயந்து போய் நின்றாராம் ஜெய்.
ஆனால், அதையடுத்து ஒரு சந்திப்பில் ஜெய்யைப்பார்த்த ஆண்ட்ரியா, சரளமாக தமிழ் பேசி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டாராம். அதைக்கேட்டு, நீ…நீங்க எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசுறீங்க ஆண்ட்ரியா? என்று கேட்டாராம் ஜெய். அதற்கு, நானாக, தானாக இப்படி பேசவில்லை. விஸ்வரூபம் படத்தில் நடித்தபோது கமல் சார் ஊட்டிய தமிழ்ப்பால்தான் இதற்கு காரணம். முதல் பாகத்தில் கொஞ்சம் விட்டு பிடித்தவர், இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக தமிழில்தான் பேசி நடிக்க வேண்டும் என்று கழுத்தைப்பிடித்து விட்டார். அதனால், அவரிடமே தமிழை முறையாக பயிற்சி எடுத்து நடித்தேன். ஆக எனது தமிழ் ஆசிரியர் கமல் சார்தான் என்றாராம் ஆண்ட்ரியா.

No comments:

Post a Comment