Monday, April 7, 2014

கலகக் குரல்கள்

நாற்காலிக் கனவுகள் காரணமாக எல்லாக் கட்சிகளிலும் கலகக் குரல்கள் எழுந்திருக்கின்றன

வெப்பம் அதிகரிக்கும் வேளை இது. வந்து கொண்டிருக்கிற கோடையைக் குறிப்பிடவில்லை. தேர்தல் காலத்தைத்தான் சொல்கிறேன். அந்தச் சூட்டின் அடையாளங்கள் ஆங்காங்கே வெளிப்படத் துவங்கிவிட்டன. விரும்பிய தொகுதி கிடைக்காதவர்கள், விரும்பியவர்களுக்குத் தொகுதி கிடைக்காதவர்கள் ஆகியோரின் முணுமுணுப்புகள் மெல்ல மெல்ல முழக்கங்கள் ஆகிவருகின்றன

பாஜக
எப்போது முடியும் எனத் தெரியாமல் இழுத்துக்கொண்டே போன பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வந்து, வண்ணங்களை வாரி இறைத்து ஹோலி கொண்டாடிய கையோடு வானவில் கூட்டணியை அறிவிக்க பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வந்திருந்த அதே நாளில் தில்லியில் அத்வானி வீட்டிற்கு மோடி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு என அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். எலியும் பூனையுமாக முறுக்கிக் கொண்டிருந்த தமிழகத் தலைவர்களை, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, கூட்டணிக்குள் கொண்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் சொந்தக் கட்சிக்குள் இருந்த தலைவர்கள் முறுக்கிக் கொண்டு முருங்கை மரம் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

விஷயம் இதுதான்: 1991-லிருந்து அத்வானி தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி கண்டு வரும் தொகுதி, குஜராத்தில் உள்ள காந்திநகர். பாஜகவின் கோட்டை. நரேந்திர மோடியே அங்கு இம்முறை போட்டியிடுவார் என சில காலங்கள் முன் வரை ஊகங்கள் ஊர்வலம் வந்து கொண்டிருந்தன. அவ்வளவு வலுவான தொகுதியை ஏன் இந்த முறை வேண்டாம் என்றார் அத்வானி?

காரணங்கள் உண்டு. 2004 தேர்தலில் அங்கு 2 லட்சத்து 16 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் ஜெயித்த அத்வானி, 2009-ஆம் ஆண்டு 1 லட்சத்து 22 ஆயிரத்து வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது. வாக்கு வித்தியாசம் குறைந்ததற்கு மோடியின் தொண்டர்கள் அத்வானிக்காக வேலை செய்வதில் அக்கறை காட்டவில்லை என அப்போதே முணுமுணுப்புகள் எழுந்தன.

குஜராத்தில் போட்டியிட்டு வென்றால் மோடியின் தயவில்தான்  வென்றதாக ஒரு சித்திரம் தீட்டப்படும், அதனால் தேர்தலுக்குப் பின் அவரால் கட்சிக்குள் மோடியை எதிர்க்க முடியாமல் போகலாம் அல்லது எதிர்த்தால், ‘நன்றி மறந்த துரோகம்’ என்று பிரசாரம் எழக்கூடும் என அவர் நினைத்திருக்கலாம் என்று சில பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.

பாஜக ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபாலில் போட்டியிட்டால் இந்தப் பேச்சு எழ வாய்ப்பில்லை. அதே நேரம் அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானை அவரவணைத்துக் கொண்டு கட்சிக்குள் மோடிக்கு எதிராக ஒரு கோஷ்டியை வலுப்படுத்த முடியும் என அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சிவ்ராஜ் சௌகானும் மோடியைப் போல தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருப்பவர். மோடியைப் போல இளம் வயதில் (13 வயதில்) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தவர். தான் ஆளும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்.

இப்படி ஒரு எதிர்க்கோஷ்டி உருவாவதை விரும்பாத ஆர்.எஸ்.எஸ்., திட்டவட்டமாக அத்வானி காந்திநகரில்தான் போட்டியிட்டாக வேண்டும் எனச் சொல்லிவிட்டதையடுத்து அத்வானி அதற்கு இறுதியில் இசைந்தார். ஆனால், கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி காரணமில்லாமல் அசிங்கப்படுத்தப்படுவதாக பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா அதன் பத்திரிகையில் கடுமையாகச் சாடியிருக்கிறது.மோடியின் சகாப்தம் துவங்கியிருக்கலாம். ஆனால், அத்வானியின் சகாப்தம் இன்னும் முடியவில்லை என்கிறது அது.

அத்வானியின் பிரச்சினைக்கு முன்னதாக முளைத்தது, முரளி மனோகர் ஜோஷியின் பிரச்சினை. ஜோஷி கட்சியின் முன்னாள் தலைவர். வாஜ்பாய், அத்வானி, ஜோஷி மூவரும் கட்சியின் திரிசூலம் என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டவர்கள். அவர், தான் தொடர்ந்து போட்டியிட்டு வரும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இம்முறையும் போட்டியிட விரும்பினார். ஆனால், பத்து மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் போட்டியிட கான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அத்வானி, ஜோஷியைப் போன்ற இன்னொரு மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங், அவர் கேட்ட தொகுதி கிடைக்காத நிலையில் வெளிப்படையாகவே போர்க் கொடி தூக்கினார். 76 வயதாகும் ஜஸ்வந்த்சிங்,  அத்வானியின் ஆதரவாளர். பாரதிய ஜனதா ஆட்சியில் நிதி, ராணுவம், வெளியுறவுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியவர்.

சென்ற முறை மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங்கில் போட்டியிட்ட அவர் இப்போது தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, பார்மர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ‘இதுவே நான் போட்டியிடுகிற கடைசி தேர்தல். நான் எனது சொந்த ஊரில் இருந்து போட்டியிட விரும்புகிறேன்’ எனக் கூறி, மேலிடத்தில் டிக்கெட் கேட்டார்.

ஆனால், ராஜஸ்தான் முதல்வரான வசுந்திரா ராஜே தன்னுடைய மாநிலத்தில் இன்னொரு தலைவர் செல்வாக்குப் பெறுவதை விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதனால், அவருக்கு மேலிடம் டிக்கெட் வழங்கவில்லை. அந்தத் தொகுதியில் முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் சோனாராம் சவுத்ரி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில்தான் காங்கிரசில் இருந்து பாரதிய ஜனதாவுக்குத் தாவியவர்.

இப்போதுள்ள பாஜகவில் போலிகள் ஊடுருவிட்டார்கள் என்று பொங்கிய  ஜஸ்வந்த், மற்ற மூத்த தலைவர்களைப் போல கிடைத்ததை வாங்கிக் கொள்வோம் என அடங்கிப் போகவில்லை. இத்தனை ஆண்டு காலம் உழைத்த கட்சியை உதறிவிட்டு சுயேச்சையாகக் களம் இறங்கிவிட்டார்.

அடுத்த துணைப் பிரதமர் என்று அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் அருண் ஜெட்லியை கூட்டணிக் கட்சியான அகாலிதளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் வர்ணித்ததைக் கண்டித்திருக்கிறார் பாஜகவின் செதித் தொடர்பாளர் முக்தர் அபாஸ் நக்வி.

கண்டனங்களும் எதிர்ப்புகளும் முணுமுணுப்புக்களும் தமிழகத்திலும் கேட்கின்றன... அருண் ஜெட்லிக்கு எதிராக அல்ல. பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு  எதிராக. அவருக்கு கோவைத் தொகுதியிலிருந்து போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. ஆனால், அதை அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவரே எதிர்க்கிறார். கட்சி அலுவலகத்திலேயே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

காங்கிரஸ்
காங்கிரசிலும் கலகக் குரல்கள் எழுந்தன. காமென்வெல்த் விளையாட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடிக்கு சீட் கொடுக்க மறுத்தது காங்கிரஸ். அவர் தனக்கு சீட் கொடுக்க முடியாதென்றால், தனது மனைவிக்குக் கொடுக்குமாறு கேட்டார். அதுவும் மறுக்கப்பட்டது. அவர் கட்சியில் இருந்து வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக மிரட்டினார். கடைசியாக வந்த தகவல்களின்படி அவர் சில தினங்கள் காங்கிரசிற்கு கெடு விதித்திருக்கிறார்.

முன்பு உ.பி.யில் கல்யாண் அரசு கவிழக் காரணமாக இருந்தவரும் உ.பி.யின் முன்னாள் முதல்வருமான ஜகதாம்பிகா பால் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்திருக்கிறார். கட்சிக்கு நெடுங்காலமாக உழைத்த தலைவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்து வரும் பாஜக, கட்சி மாறி வந்த இவருக்கு அவர் கேட்ட தொகுதியே கொடுத்திருக்கிறது.

உத்ரகாண்ட் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. சத்பால் மகராஜ், தனது ஆதரவாளரான பத்து எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவிற்குத் தாவிவிட்டார். அதன் காரணமாக உத்ரகாண்ட் காங்கிரஸ் அரசு கவிழும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 70 இடங்கள் உள்ள அந்தச் சட்டமன்றத்தில் காங்கிரசிற்கு ஏற்கெனவே 33 இடங்கள்தான், அதில் 10 போய்விட்டால்?

பிரபல பத்திரிகையாளரும் முன்பு பீகார் கிஷன்கஞ்ச் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பியுமான எம்.ஜே.அக்பர், பாஜகவில் இணைந்துவிட்டார். ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இவர்.

அதிருப்தியும் கண்டனங்களும் தமிழ்நாட்டிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. சிதம்பரம், தென்காசி ஆகிய தொகுதிகளுக்கு காங்கிரசால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வள்ளல் பெருமான், ஜெயக்குமார் ஆகியோர் திரும்பப் பெறப்பட வேண்டும் என மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கே வந்து போராட்டம் நடத்தினர்.

திமுக
திமுக அறிவித்த வேட்பாளர்கள் மீது அதிருப்தி உமிழும் கருத்துக்கள் முதலில் கருணாநிதியின் மகன் அழகிரியிடமிருந்து எழுந்தன. அதில் அச்சரியமில்லை. கட்சியில் சில காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சகோதர யுத்தத்தின் குரல் அது. இந்த வேட்பாளர்களோடு கழகம் களம் கண்டால், அது நான்காவது இடத்திற்குத்தான் வரும் என்று பகிரங்கமாகச் சொன்னார் அவர்.

அவரது கண்டனம் வார்த்தைகளோடு நின்றுவிடும் எனத் திமுக தலைமை கருதியது. ஆனால், அவர் நடத்திய ஆதரவாளர்கள் கூட்டமும் அதற்கு வந்தவர்களின் எண்ணிக்கையும் திமுக தலைமையை திடுக்கிட வைத்துவிட்டது. அவரோடு யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டால், அவர்கள் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டது அது. பனங்காட்டு நரிகள் இந்தச் சலசலப்பிற்கெல்லாம் அஞ்சுமா என்பதுதான் அரசியல் நோக்கர்கள் வட்டாரத்தில் வலம் வரும் கேள்வி. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பகிரங்கமாகவே பாஜக கூட்டணிக்கு அழகிரியின் ஆதரவைக் கோரியிருக்கிறார்.

திமுகவில் கண்டனங்கள் கைகலப்பிலும் முடிந்திருக்கின்றன. திமுக கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால், இதற்கு வேலூர் திமுகவில் எதிர்ப்பு இருந்தது.

‘வேலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராகவும் திமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக தலைமைக்குத் தெரியவந்தது’ என்று கூறி,  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 11 பேரை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தற்காலிகமாக நீக்கப்பட்ட திமுகவினர் அனைவரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக
வானவில்லைப் போல ஏழு கட்சிகளின் கூட்டணி என்று பாஜக கூட்டணியை ஊடகங்கள் வர்ணித்தன. பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக, ஐஜேகே, கேஎம்டிகே ஆகிய ஆறு கட்சிகளோடு புதுச்சேரியில் உள்ள என். ஆர். காங்கிரஸ் ஆகியவைதான் அந்த 7 கட்சிகள். ஆனால் புதுவையில் பாமக, என்.ஆர்.காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது.

இந்தக் கட்சித் தாவல்களும் கலகக் குரல்களும் இந்திய ஜனநாயகம் எத்தனை பெரிய கேலிக் கூத்தாகிவிட்டது என்பதையும் எல்லாக் கட்சிக்குள்ளும் எப்படிப் பதவி வெறி படமெடுத்து ஆடுகிறது என்பதையும் அப்பட்டமாக உணர்த்துகிறது.

இன்னும் எத்தனை வேடிக்கைகள் காத்திருக்கின்றனவோ?

SOURCE: PUTHIYA THALAIMURAI (மாலன்)

No comments:

Post a Comment