Friday, April 11, 2014

கோவை அன்னூர் அருகே பரபரப்பு ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து சென்றவர்களுக்கு சாப்பாடு, பணம் தராததால் பஸ்கள் சிறைபிடிப்பு

ன்னூர்: கோவை அருகே உள்ள காரமடையில் நடந்த ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்களுக்கு பணம், சாப்பாடு, தண்ணீர் தராததால் பொதுமக்கள் பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று கோவை அருகே உள்ள காரமடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திலிருந்து பஸ்களில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை கட்சி நிர்வாகிகள் காரமடை அழைத்துச் சென்றனர்.

அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த எல்லப்பாளையம் சுப்ரமணிக்கவுண்டன்புதூர், வெள்ளாளபாளையம், காந்திகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 5 பஸ்களில் 650 பேரை அழைத்துசென்றனர்.அவர்களுக்கு ரூ.200, சாப்பாடு, தண்ணீர் தருவதாக கூறியிருந்தனர். இவர்கள் சென்ற பஸ் காரமடைக்கு முன்பாக உள்ள குமரன் குன்று பகுதி அருகில் சென்றது. அதற்குள் முதல்வர் ஜெயலலிதா கூட்டம் துவங்கி விட்டது. இதனால், பொதுக்கூட்டத்திற்கு இனி செல்ல முடியாது எனக் கூறி பஸ்களில் வந்த கட்சி நிர்வாகிகள் பஸ்சிற்குள் இருந்த பொதுமக்களை மாலை 5 மணி வரை அங்கேயே காக்க வைத்தனர்.

அதுவரை அவர்களுக்கு தண்ணீர், சாப்பாடு, பணம் ரூ.200 எதுவும் வழங்கவில்லை. பிறகு அதே பஸ்சில் அவர்களை மாலை எல்லப்பாளையம் அனுப்பி வைத்தனர். பஸ்சிலிருந்து இறங்கியதும் பொதுமக்கள் ஆவேசமடைந்து 4 தனியார் பேருந்துகளை சிறைபிடித்தனர். தங்களுக்கு உறுதியளித்தபடி தண்ணீர், உணவு, பணம் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும்,  பணம் மற்றும் இரவு உணவு கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். ஆனால், கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. இதனால்,  இரவு வரை போராட்டம் தொடர்ந்தது.

No comments:

Post a Comment