Tuesday, March 25, 2014

பட விழாவுக்கு அடியாட்களுடன் வருகிற அளவுக்கு ‘‘நான் கந்து வட்டி தொழில் நடத்தவில்லை’’ நடிகர் சிவகார்த்திக்கேயன் பேட்டி

சென்னை,
‘‘படவிழாவுக்கு அடியாட்களுடன் வருகிற அளவுக்கு நான் கட்ட பஞ்சாயத்தோ அல்லது கந்து வட்டி தொழிலோ நடத்தவில்லை’’ என்று நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறினார்.
பேட்டி
சிவகார்த்திக்கேயன்-ஹன்சிகா ஜோடியாக நடித்த ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு சிவகார்த்திக்கேயன் 50 அடியாட்களுடன் வந்ததாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி சிவகார்த்திக்கேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
‘‘மான் கராத்தே படவிழாவுக்கு நான் அடியாட்களுடன் வரவில்லை. அடியாட்களுடன் வருகிற அளவுக்கு நான் கட்ட பஞ்சாயத்தோ அல்லது கந்து வட்டி தொழிலோ நடத்தவில்லை. சினிமாவுக்கு நான் தனியாகத்தான் வந்தேன். படவிழாக்களுக்கும் தனியாகவே வருகிறேன்.
வசதியானவன் அல்ல
50 அடியாட்களுடன் வருகிற அளவுக்கு நான் வசதியானவன் அல்ல. அடியாட்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு பல லட்சங்கள் தேவைப்படும். அடியாட்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு பல லட்சங்கள் சம்பளம் கொடுக்கிற அளவுக்கு என்னிடம் பணம் இல்லை.
அதேபோல் தேர்தல் கமிஷன் படத்தில் நான் நடிக்க மறுத்ததாகவும் வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. தேர்தல் கமிஷன் படத்தில் நடித்துக்கொடுத்து இருக்கிறேன்.
ஹன்சிகாவின் காதல்
‘மான் கராத்தே’ படத்தில் நான் ஹன்சிகாவுடன் ஜோடியாக நடித்தாலும், அவருடைய சொந்த பிரச்சினைகள் பற்றி பேசுவதில்லை. அந்த அளவுக்கு எங்களுக்குள் நெருக்கம் இல்லை. ஹன்சிகா காதலில் தோல்வி அடைந்தது எனக்கு தெரியாது. அவருக்கு நான் ஆறுதல் சொல்லவும் இல்லை.
பெரிய கதாநாயகிகளுடன் தான் நடிப்பேன் என்று நான் கூறுவதில்லை. எனக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளை டைரக்டரும், தயாரிப்பாளரும் தான் முடிவு செய்கிறார்கள். ‘மான் கராத்தே’ படம் சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் அது பிடித்த படமாக இருக்கும்.’’
இவ்வாறு சிவகார்த்திக்கேயன் கூறினார்.
பேட்டியின் போது பட அதிபர் பி.மதன், டைரக்டர் திருக்குமரன், இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
SOURCE: DAILY THANDHI

No comments:

Post a Comment