Tuesday, March 25, 2014

கோவை சிறுவன், சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு உறுதி

கோவையில் 2010 ஆம் ஆண்டு 11 வயது பள்ளி மாணவியும், அவருடைய 8 வயது சகோதரனும் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
கோவையில் துணிக்கடை நடத்தி வந்த ரஞ்சித் குமார் ஜெயின் என்பவரது 11 வயது மகள், 8 வயது மகன் ஆகியோர் 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி பள்ளி செல்லும்போது காணாமல் போயினர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், இவ்விரு சிறுவர்களையும் பொள்ளாச்சியை சேர்ந்த கார் டிரைவர் மோகன்ராஜ் என்பவரும், மற்றொரு டிரைவர் மனோகரன் என்பவரும் சேர்ந்து கடத்தியதும், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிறுவனுடன் சேர்ந்து கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய கோவை போலீஸார், மோகன்ராஜ் மற்றும் மனோகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களில், மோகன்ராஜ் தப்பியோட முயன்றபோது போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பின்னர், இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து, மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், டி.என். பிரகாஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரனின் மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

SOURCE: THE HINDU

No comments:

Post a Comment