Sunday, March 23, 2014

'இந்திய ஐக்கிய நாடுகள்' - மதிமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்


பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:
* இந்தியா ஒற்றை ஆட்சி முறை நாடாக மாற்றப்பட்டுவிட்டது. எனவே நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி, உண்மையான கூட்டாட்சியை நிலைபெறச் செய்யவும், அம்பேத்கரே குறிப்பிட்டது போல இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
* இந்த நாடு, இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதில், இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும். அதை நிறைவேற்ற மதிமுக முன் முயற்சிகளை மேற்கொள்ளும்.
* பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இல்லாத எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தையும், மாநிலங்களுக்கே வழங்க வேண்டும். மாநிலங்களிடமிருந்து மத்திய அரசு பெறும் வருவாயில், 50 சதவீதம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
* தமிழ் ஆட்சி மொழியாகும் வரை, ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தகுதி வாய்ந்தவரை இயக்குநராக அமர்த்த வேண்டும்.
* தமிழீழம் என்ற நோக்கத்தை நிறைவேற்ற பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐ.நா. சபைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.
* சமூக நீதிக்கு எதிரான சட்டங்களை மாற்றி, இட ஒதுக்கீடு உரிமை பாதுகாக்கப்படும். சிறுபான்மை நலன் பாதுகாக்கப்படும்.
* நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். காவிரி மேலாண் ஆணையம் அமைத்தல், ஒழுங்குமுறைக் குழு அமைத்தல் போன்றவற்றை வலியுறுத்துவோம்.
* முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதுடன், அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு சட்டமாக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்படும்.
* விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடை நீக்கப்பட வேண்டும்.
* இந்தியாவில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்.
* தமிழ்நாட்டு மீனவர்களின் மரபு உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்கவும், மீனவர்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவும் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாற்று வழித்தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
* கூடங்குளத்தில் மேலும் அணு உலைகள் அமைக்க முயற்சிப்பதைத் தடுப்பதுடன், தற்போது இயங்கி வரும் அணு உலைகளையும் மூடிட வலியுறுத்தப்படும்.
* மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
* அத்தியாவசியப் பொருட்களுக்கான ஊக வணிகம் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும்.
* எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக் கொள்ளும் நிலையை மாற்றி, மத்திய அரசு அந்தப் பொறுப்பை ஏற்க வலியுறுத்துவோம்.
* தேசிய மின் கட்டமைப்புகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் அளவு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிழக்குக் கடற்கரையை ஒட்டி சென்னை – கன்னியாகுமரியை இணைக்க 'கிழக்குக் கடற்கரை ரெயில் பாதை' அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* இளநிலை பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* இஸ்லாமியர்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளுக்காக சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றக் குரல் கொடுப்போம்.
* நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடக் குரல் கொடுப்போம்.
* சில்லறை வணிகத்தை அழிக்க முயலும் அயல்நாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம்.
* உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைத்திட வலியுறுத்துவோம்.
* இளைஞர்கள் சீரழிவிற்கும் மூல காரணமான மதுக் கடைகளை மூட வேண்டும். முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது.
* கட்டுப்பாடற்ற முறையில் சாலை சுங்கவரி வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.
* புதுச்சேரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி, தனி மாநிலத் தகுதி கிடைக்க ஆவன செய்வோம்.
* கறுப்புப் பணத்தை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வர வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

SOURCE: THE HINDU

No comments:

Post a Comment