தமிழகத்தில் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரொக்கமாக சுமார் 10 கோடியே 25 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பிடிபட்டிருப்பதாக தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்ட தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், சிறப்புத் தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர், தேர்தல் தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்காக 1,410 படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அதேபோல, சுமார் 1 கோடியே பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பிடிபட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்களின் சிலைகளைப் பொறுத்தவரை, மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படாது என்றும் கோவில் திருவிழா போன்றவற்றில் அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார் தெரிவித்தார்.
அரசு நடைமுறைப்படுத்தும் பல திட்டங்களில் அம்மா என்ற பெயர் இடம்பெறுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, அம்மா என்ற சொல் பொதுச்சொல் என்பதால், அதனை பயன்படுத்தத் தடை இல்லை என்றும், ஆனால், அதற்கு அருகில் எந்த அரசியல் தலைவரின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்றும் பிரவீண்குமார் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால், தமிழகத்தில் அரசு சொத்துக்களில் உள்ள அ.தி.மு.க. கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், எம்.ஜி.ஆர். நினைவகத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள இரட்டை இலையை மறைக்க கோரியும் தொடரப்பட்டிருந்த வழக்கில் தேர்தல் ஆணயத்தின் சார்பில் பதிலளிக்கும்போது, எம்.ஜி.ஆர். நினைவகத்தின் முன்பு கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலில் பறக்கும் குதிரை மற்றும் இரட்டை இலை சிற்பங்கள் தேர்தலுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டதால் அதில் தேர்தல் ஆணையம் தலையிட விரும்பவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதேபோல, தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் மலிவு விலையில் விற்கப்படும் குடிநீரில் பொறிக்கப்பட்டுள்ள அம்மா என்ற வார்த்தையும், உணவங்களில் உள்ள அம்மா என்ற வார்த்தையும் தமிழில் பொதுச்சொல்லாகும். ஆகையால் அதை மறைக்கவோ, அழிக்கவோ தேவையில்லை. ஆனால் முதல்வரின் படம் உள்ளதை மட்டும் மறைக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

No comments:
Post a Comment