Thursday, March 27, 2014

காங்கிரசை திமுக ஆதரிக்க தயாராக இருக்கும் : சென்னையில் பிரசாரத்தை துவக்கி கருணாநிதி பேச்சு



சென்னை: சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தென்சென்னை வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வடசென்னை வேட்பாளர் கிரிராஜன் ஆகியோரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். அப்போது, வேட்பாளர்களின் பிரசாரத்தை தொடங்கி வைத்து திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: சிந்தாதிரிப்பேட்டையில் அண்ணாவும், தம்பிமார்களாகிய நாங்களும் ஒன்றல்ல இரண்டல்ல பல நேரங்களில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்துள்ளோம். இங்கேதான் அண்ணா அன்றைக்கு திமுகவின் வளர்ச்சிக்காக, எழுச்சிகாக, நம்மையெல்லாம் அவருடைய அழகு தமிழ் மூலம் தயார்படுத்தினார். இங்கே மதசார்பற்ற இயக்கம் காண வேண்டும் என்ற துடிப்போடு நடந்து கொண்ட இயக்கத்துக்கு பெயர்தான் திமுக ஆகும். திராவிட முன்னேற்ற கழகம் திமுக என்ற எழுத்துக்களை கொண்டது என்றாலும் இந்த திராவிடர்களை ஒன்றுபடுத்தி அவர்களுடைய முன்னேற்றத்துக்காக உழைத்து கண்ணியத்தோடு நடைபெறும் இயக்கம் திமுக என்ற மூன்று எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன.

 காட்டாறுகளில் ஒன்று இன்றைக்கு தமிழகத்தை சுற்றி நம்மையெல்லாம் சோதனைக்கு ஆளாக்கி வருவதை அனைவரும் அறிவீர்கள். அந்த சோதனைகளை கடந்து, வேதனைகளை கடந்து சாதனை புரிகிறவர்களாக நாம் விளங்க வேண்டும் என்று திமுக சார்பில் அதன் தலைவராக நான் உங்களையெல்லாம் சந்திக்கிறேன். ஏதோ இறுமாப்போடு சொல்லவில்லை. உங்களை, தொண்டர்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்று இறுமாப்போடு சொல்ல நான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அல்ல. இறுமாப்பு என்பதையோ அல்லது யாருக்கும் அஞ்சமாட்டேன் என்ற அந்த குரலையோ என்னிடம் என்றும் காண முடியாது. பணிவு, கனிவோடு வாழும் நான், மக்களின் இதயத்தை புரிந்து கொண்டுள்ளவன். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்று யாராக இருந்தாலும் அனைவரும் நம் சகோதரர்கள்தான். (நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் கவிஞர் தாகூர் பாடலை கருணாநிதி பாடிக் காட்டினார்) இது  மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், கிரிராஜன் அறிமுகப்படுத்தும் கூட்டம்.

நான் 1938ல் அரசியலில் ஈடுபட்டேன். 75 ஆண்டுகள் என் பொது வாழ்வில் உருண்டு ஓடி விட்டன. 100 வயதை தொடும் அளவுக்கு பெரியார் வாழ்ந்தார். காயிதே மில்லத் முதிர்ந்த வயதிலும் சிறுபான்மை மக்களுக்காக பாடுபட்டார். அண்ணாவை 60 வயதுக்குள் இழந்தோம். அவரை இழந்தாலும் அவரது கொள்கை, லட்சியத்தை விட்டு விடவில்லை. சிலர் அண்ணா பெயரை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் ஏதோ ஒப்புக்காக அண்ணா பெயரை கூறுகிறார்களே தவிர அண்ணாவுக்கும் அவர்களுக்கும் வேறு எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் நாம் அண்ணா பெயரையும் வைத்து அவரது கொள்கைகளையும் லட்சியங்களையும் வைத்து இருக்கிறோம். அவர்கள் என்னைப் போல அண்ணாவை அறிந்தவர்கள் அல்ல. அண்ணா மீது பற்று பாசம் அவர்களுக்கு இருந்தால் அண்ணா பெயரில் அமைக்கப்பட்டவைகளை இடித்து சுக்கு நூறாக்குவார்களா? அண்ணா பெயரில் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு நூலகம் அமைத்தோம். தலைமைச் செயலகம் கட்டினோம். இடித்து தூளாக்கினார்கள். கருணாநிதி கட்டியது அதனால் இடித்தோம் என்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள எந்த முதல்வருக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை இல்லாமல் இருந்தது. பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் வாதாடி போராடி அந்த உரிமையை பெற்று கொடுத்தேன். கருணாநிதி கட்டியதால் இடித்தோம் என்று கூறியது போல கருணாநிதி பெற்று தந்த உரிமை என்பதால் அடுத்த ஆண்டு கொடி ஏற்றுவாரா என்ற கேள்விக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும். ஆறுகளில் திமுக ஆட்சியில் பாலம் கட்டினோம். அதில் ஜெயலலிதா கார் போகாது என்று சொல்ல முடியுமா? தமிழகத்தில், சென்னையில் ஜெயலலிதா பயணம் செய்யும் கார் எந்த சாலையில் செல்கிறது. கருணாநிதி போட்ட சாலையில் செல்கிறது. அதில் செல்ல மாட்டேன் என்று ஜெயலலிதா சொல்வாரா. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். அவர் மறைந்த பிறகு நான் ஆட்சிக்கு வந்தேன். அதே சத்துணவு திட்டம் நீடித்தது. அது எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டம் என்று முட்டாள்தனமாக சொல்லவில்லை. எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு  திட்டத்தின் தொடர்ச்சி என்று ஏற்றுக் கொண்டோம். அதில் மேலும் சத்துக்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக முட்டை வழங்கினோம். அது எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டம் அதை முடக்குவோம் என்று முட்டாள்தனமாக சொல்லவில்லை. மக்களுக்காக செய்யப்படும் பணிகள் தொடர வேண்டும். அதுதான் ஜனநாயகம்.

ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார் என்று சொல்கிறாரே, அந்த அம்மாவுக்கு எவ்வளவு தொகை குவிந்துள்ளது, சொத்து சேர்ந்துள்ளது என்பதை சொத்து குவிப்பு வழக்கில் தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் முதலில் வாதிட்ட வக்கீல் பவானிசிங் பெங்களூர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு, பின் அவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் என்று போடபட்டது. அடுத்த நாளும் அதே தொகை அபராதம் போடப்பட்டது. 3வது நாள் அவர் ஒரு வழியாக ஆஜராகி சொத்து குவிப்பு வழக்கின் உண்மைகளை போட்டு உடைத்தார். ஒரு ரூபாய் சம்பளம் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு எப்படி வருவாய் வந்தது என்ற பட்டியலை நீதிமன்றத்தில் படித்து காட்டினார். சென்னையில் வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கரில் ஒரு பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கொடநாட்டில் 800 ஏக்கரில் பங்களாக்கள், இதுவே ரூ.6000 கோடியை தாண்டும் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அதிமுக தலைவிக்கு 200 ஏக்கர், கன்னியாகுமரியில் 190 ஏக்கர் நிலம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர் நிலம், பார்ம் 100 ஏக்கர், பல கலரில் 30 கார்கள், ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம் என்று சொத்து குவித்துள்ளதை தெரியப்படுத்தினார்.

தனது பதவியை பயன்படுத்தி இத்தனை சொத்துகளை குவித்த புனிதவதி, தான் என்னவோ ஏழைபோலும் ஊழல் என்றால் என்ன என்றே தெரியாத பச்சைக்குழந்தை போல பேசுகிறாரே. இந்த விவரங்களை எல்லாம் நாளை எந்த பத்திரிக்கையும் வெளியிடாது. எந்த அளவுக்கு மறைக்க முடியுமோ எந்த அளவுக்கு மறைப்பார்கள். ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து குவித்த விவரம் வராது. இதை நாளை வெளியிடும் பத்திரிக்கைக்கும் இன்றே எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் எங்கே தவறுகள் நடந்தாலும் அதை கண்டிக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆ.ராசா எத்தனையோ கோடி சம்பாதித்துவிட்டார் என்று பல சைபர்களை போட்டுக் காட்டினார்கள். அப்படி சொன்னதில் இப்போது ஒவ்வொரு சைபராக மறைகிறது. ராசா மீதான குற்றத்தை நிரூபித்தார்களா என்றால் இல்லை. திமுகவை பழிவாங்கவே இது. தங்கள் ஆட்சியை காத்து கொள்ளவே நன்றி மறந்து காங்கிரஸ் நண்பர்கள் பேசினார்கள். காங்கிரஸ் இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடக்கிறது என்றால் அதற்கு காரணம் அவர்கள் நன்றி மறந்து செயல்பட்டதுதான்.

நன்றி உணர்வு இல்லாமல், கைதூக்கி விட்டவர்களிடம் நன்றி மறந்து செயல்பட்டதன் காரணத்தால், அதற்கான தண்டனையை அனுபவிக்கிறார்கள். இதை மனம் வருந்தி நான் கூறுகிறேன். அவர்கள் தங்களின் தவறுகளை நினைத்து பார்த்து, மனம் வருந்தி, மதச்சார்பின்மை அரசு அமைய திமுகவை நாடி வந்தார்கள் என்றால் அவர்களை திமுக ஆதரிக்க தயாராக இருக்கும். அவர்களுக்கு திமுக பாவமன்னிப்பு வழங்கும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரசாருக்கு வந்த தீமையை போக்க அவர்களுக்கு ஆதரவாக இருந்து, நாம் செய்த காரியங்களை எண்ணிப்பாராமல் செயல்பட்டனர். நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும், அது நண்பனாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், யாராக இருந்தால் என்ன? அவர்களை நான் மன்னிக்க மாட்டேன். கண்ணியதை கடைப்பிடிக்காமல், கொள்கைக்கு எதிரானவர்கள் குழந்தை குட்டியாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். கொள்கையை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுப்பேன்.

நான் 70 ஆண்டுகளாக அரசியலில் பல சாதனைகளைசெய்துள்ளேன். அதைப்போலவே பல வேதனைகளை யும் கடந்து வந்துள்ளேன். இப்போது எனக்கு 91 வயது ஆகப்போகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழப்போகிறேன் என்பது முக்கியம் அல்ல. நான் வாழப்போகும் காலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன செய்துள்ளேன் என்பதை எண்ணிப்பார்ப்பதுடன், இன்னும் என்ன செய்ய வேண்டி உள்ளது என்பதை எண்ணிப்பார்த்து அவற்றை செய்து முடிக்க பாடுபடுவேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது, காப்பாற்றுவது எல்லாம் உங்கள் கையில் உள்ளது. உதய சூரியன் உங்கள் சூரியன். அதற்கு வாக்களித்து  திமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment